செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
fc4ca117-0c89-4c29-a3b4-1ff1f0f66846
-

டுவிட்டரின் புதிய தலைமை நிர்வாகியாக இந்திய வம்சாவளி ஆடவர்

நியூயார்க்: டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஜேக் டோர்சி (வலது படம்) நேற்று பதவி விலகினார். இதுபற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த அவர், "தற்போது வெளியேறுவதற்கான நேரம் இது," என்றார்.

இதையடுத்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்நுட்ப நிர்வாகி பராக் அகர்வால் டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். டுவிட்டரின் தலைமை பதவி தனக்கு கிடைத்த கௌரவம் என்று அவர் குறிப்பிட்டார். ஐஐடி மும்பை, ஸ்டாம்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்ற அகர்வால் 10 ஆண்டுகளுக்கு முன்பு டுவிட்டர் நிறுவனத்தில் சேர்ந்தார்.

டுட்டர்டே ஆதரவாளர் விலகல்

மணிலா: பிலிப்பீன்ஸ் அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார் தற்போதைய அதிபர் டுட்டர்டேவிற்கு நெருக்கமானவரான கிறிஸ்டஃபர் கோ. தனக்கான நேரம் இன்னும் வரவில்லை என்று குறிப்பிட்ட அவர், டுட்டர்டேவிற்கு மேலும் பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர்க்க விரும்புவதாகவும் சொன்னார்.

முதலில் துணை அதிபர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த அவர், அதற்கான காலக்கெடு முடிய இரண்டு நாட்கள் இருக்கும்போது அதிபர் பதவிக்குப் போட்டியிட முடிவு செய்தார்.

அதிபர் தேர்தலில் கோ வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு குறைவு என்ற கருத்தே பெரும்பாலும் நிலவிய நிலையில், அவர் போட்டியில் இருந்து விலகியுள்ளார். அத்துடன் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கை தொடர்பில் டுட்டர்டே மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து கோ, அவரைக் காப்பாற்றக்கூடும் என்றும் சிலர் கருதுகின்றனர்.

ஆங் சான் ‌சூச்சி மீதான வழக்கு விசாரணையின் தீர்ப்பு ஒத்திவைப்பு

யங்கூன்: மியன்மார் முன்னாள் தலைவர் ஆங் சான் ‌சூச்சி மீதான வழக்கு விசாரணையின் தீர்ப்பு டிசம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ராணுவத்திற்கு எதிராக மற்றவர்களைத் தூண்டுதல், சட்டங்களை மீறுதல் ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் தீர்ப்பு வழங்கப்படவிருந்தது.

பழிவாங்கும் செயல்: ஆப்கான் வீரர்கள் பலரைக் காணவில்லை

காபூல்: தலிபான் அமைப்பினரின் இரண்டரை மாத ஆட்சியில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படை வீரர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுவிட்டதாகவோ, காணாமற் போய்விட்டதாகவோ மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் அறிக்கை ஒன்று கூறுகிறது. குறிப்பாக, அவர்கள் கஸினி, ஹெல்மான்ட், கந்தகார், குண்டுஸ் ஆகிய நான்கு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஆகஸ்ட் மாதம் தலிபான் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து நாடு முழுவதும் நடந்து வரும் இதுபோன்ற படுகொலைகள் பெரும்பாலும் பழிவாங்கும் நடவடிக்கையாக கருதப்படுகிறது.