பெருமையுடன் தோற்ற வீராங்கனை
உலக பூப்பந்து சம்மேளனத்தின் பொதுவிருதுப் போட்டியின் இறுதிச் சுற்றில் சிங்கப்பூர் வீராங்கனை இயோ ஜியா மின் (படம்) தோல்வி அடைந்து உள்ளார். சுமார் 34 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தில் உலகத் தர வரிசையில் 3வது இடத்தில் உள்ள ஜப்பானின் அகானே யமகுச்சியிடம் (21-11, 21-14) அவர் தோல்வியைத் தழுவினார். ஆனால் இத்தகைய இறுதிச்சுற்றில் பங்கேற்ற முதல் சிங்கப்பூரர் என்ற பெருமையை அவர் சாதித்துள்ளார்.
10 பேருடன் நியூகாசல் சமநிலை
இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் நார்விச்சுக்கு எதிரான போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் நியூகாசல் களமிறங்கியது.
ஆனால் செயின்ட் ஜேம்சஸ் பார்க்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் அதனால் சமநிலை மட்டுமே காண முடிந்தது. தப்பாட்டம் ஆடியதால் நியூகாசலின் சியாரன் கிளார்க்குக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டது. இதன் காரணமாக எண்பது நிமிடங்களாக நியூகாசல் பத்து ஆட்டக்காரர்களுடன் விளையாடியது.
நேற்று முன்தினம் நடைபெற்ற மற்றோர் ஆட்டத்தில் லீட்ஸ் குழு கூடுதல் நேர ஆட்டத்தில் போட்ட கோலால் கிறிஸ்டல் பேலஸ் குழுவை 1-0 என வெற்றி கொண்டது. லீட்ஸ் குழுவின் கோலை பிரேசிலிய வீரர் ரஃபினா பெனால்டி வாய்ப்பின் மூலம் போட்டார்.
சுசுகி கிண்ணம்; சிங்கப்பூர் உறுதி
ஓமிக்ரான் கிருமி புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதால் மீண்டும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும் சுசுகி கிண்ணப் போட்டியை நடத்துவதில் சிங்கப்பூர் உறுதி யுடன் இருந்து வருகிறது. வரும் டிசம்பர் 5ஆம் தேதி போட்டி தொடங்குகிறது. கொவிட்-19 பரவும் சூழ்நிலையில் நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல இந்தப் போட்டி முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசியான் காற்பந்து சம்மேளனம் கடைசியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இவ்வட்டாரத்தின் ஆகப்பெரிய இந்தக் காற்பந்துப் போட்டியை நடத்தியது. பத்து நகரங்களில் நடந்த 26 போட்டிகளில் 750,000 ரசிகர்கள் பங்கேற்றனர். ஆனால் இம்முறை மிகவும் குறைவான எண்ணிக்கையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர்.

