இந்தியாவில் மூன்றாவது நபருக்கு 'ஓமிக்ரான்' தொற்று

இந்தியாவில் மூன்றாவது நபருக்கு 'ஓமிக்ரான்' தொற்று

1 mins read
3bead9b6-9236-4de4-b409-3f8bb5fe848e
இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் பயணியிடமிருந்து பரிசோதனை மாதிரிகளைப் பெற்றுக்கொள்ளும் சுகாதார ஊழியர். படம்: ஏஎஃப்பி -

இந்தியாவில் மூன்றாவது நபருக்கு 'ஓமிக்ரான்' வகை கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதாக அரசாங்க அதிகாரிகள் இன்று (டிசம்பர் 4) தெரிவித்தனர்.

ஸிம்பாப்வே நாட்டில் பல்லாண்டு காலமாக வசித்து வந்த 72 வயது ஆடவர், கடந்த நவம்பர் 28ஆம் தேதி இந்தியா திரும்பினார். அவருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதியானதாக குஜராத் மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.

கர்நாடக மாநிலத்தில் 66 மற்றும் 46 வயதுடைய இரு ஆடவர்களுக்கு ஓமிக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சு வியாழக்கிழமை தெரிவித்திருந்தது.

முதலாமவர், தென்னாப்பிரிக்க நாட்டவர். இரண்டாமவர், பெங்களூரு மருத்துவர். அவர் அண்மையில் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளவில்லை.

இதற்கிடையே, இந்தியாவில் புதிதாக 8,603 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்று காரணமாக மேலும் 415 பேர் உயிரிழந்துவிட்டனர்.