கோலாலம்பூர்: மலேசியாவில் கொவிட்-19 சூழல் பெரிய அளவில் உருவெடுத்த சென்ற ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இவ்வாண்டு ஜூலை மாதத்திற்கு இடைப்பட்ட காலத்தில் 21,316 மாணவர்கள் பள்ளிக் கல்வியை நிறுத்தியதாக அந்நாட்டின் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டு மார்ச் மாதத்திற்கும் டிசம்பர் மாதத்திற்கும் இடையே 11,301 பேர் பள்ளிக் கல்வியை நிறுத்தியிருக்கின்றனர். இவ்வாண்டு ஜனவரியிலிருந்து ஜூலை வரையிலான காலத்தில் 10,015 மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதை நிறுத்தியுள்ளனர்.
மலேசியக் கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் உள்ள தகவல்களின்படி அந்நாட்டில் மொத்தம் 5,038,318 மாணவர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கையில் பாலர் பள்ளி சிறுவர்கள், தொடக்கநிலை, உயர்நிலை மாணவர்கள் உள்ளிட்டோர் அடங்குவர்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை என்றழைக்கப்படும் முடக்கநிலையை மலேசியா முதன்முதலில் சென்ற ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் தேதியன்று நடைமுறைப்படுத்தியது. பல கட்டங்களைக் கடந்த அந்நிலை நடப்பில் இருந்தபோது பள்ளிகள் மூடப்பட்டு பாடங்கள் மெய்நிகராகக் கற்றுத்தரப்பட்டன. உலகின் பல பகுதிகளைப் போல் மலேசியாவும் தொடர்ந்து கொரோனாவுடன் போராடுகிறது.

