ரயில் நிலையம்போல காட்சியளிக்கும் டெல்லி விமான நிலையம்

ரயில் நிலையம்போல காட்சியளிக்கும் டெல்லி விமான நிலையம்

2 mins read
4d0925cf-f54b-4a99-8bbc-d2bbc57c17d1
ரயில்வே நிலையம்போல காட்சியளிக்கும் டெல்லி விமான நிலையம். படம்: என்டிடிவி -

'ஓமிக்ரான்' கிருமிக்கு எதிராக டெல்லி விமான நிலையத்தில் பயண விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதால் கொரோனா பரிசோதனை செய்துகொண்டபின் பயணிகள் 8 மணிநேரம் வரை காத்திருக்கும் சூழல் நிலவுகிறது.

டெல்லி விமான நிலையத்தில் உள்ள நிலவரத்தைக் காட்டும் புகைப்படங்கள் பரவலாகி வருகின்றன. அவற்றைப் பார்ப்பதற்கு ரயில் நிலையம்போல் இருக்கிறது.

சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படாததால், கொரோனா கிருமி பரவும் மையப் பகுதியாக டெல்லி விமான நிலையம் மாறலாம் என்று பயணிகள் பலர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

காத்திருப்பு நேரத்தைக் குறைத்துக்கொள்ள, பயணிகள் பலரும் விரைவு பரிசோதனையைத் தேர்வு செய்வதாக என்டிடிவி செய்தி நிறுவனம் தெரிவித்தது. டெல்லி விமான நிலையத்தில் விரைவு பரிசோதனைக்கான கட்டணம் ரூ.3,500. வழக்கமான ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கான கட்டணம் ரூ.500.

டெல்லி விமான நிலையத்தில் உள்ள நிலவரம் குறித்த செய்திகள் வெளியான பிறகு, இந்திய விமான நிலைய ஆணையம், டெல்லி விமான நிலைய நிர்வாகம் உள்ளிட்ட பலதரப்புகளுடன் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா திங்கட்கிழமை (டிசம்பர் 6) ஆலோசனை நடத்தினார்.

மேம்பட்ட கூட்ட நிர்வாக உத்திகளை நடைமுறைப்படுத்துமாறு டெல்லி விமான நிலைய நிர்வாகத்தினரிடம் அவர் கேட்டுக்கொண்டதாக பிடிஐ செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

அதிகமான பயணிகள் கொவிட்-19 பரிசோதனைக்கு முன்பதிவு செய்வதை முன்னிட்டும் கூடுதலானோர் விரைவு பரிசோதனையைத் தேர்வு செய்வதாலும், 120 விரைவு பரிசோதனைக் கருவிகள் பொருத்தப்பட்டு இருப்பதாக டெல்லி விமான நிலையத் தலைவர் தெரிவித்துள்ளார்.

முன்பதிவு செய்தவர்களுக்காக 20 பிரத்தியேக முகப்புகள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் சொன்னார்.