கொலை வழக்கு: பங்ளாதேஷில் 20 மாணவர்களுக்கு மரண தண்டனை

கொலை வழக்கு: பங்ளாதேஷில் 20 மாணவர்களுக்கு மரண தண்டனை

1 mins read
bd092a60-c747-4448-8a58-fcaf651e238b
சக மாணவர்களால் அடித்துக் கொல்லப்பட்ட அப்ரார் ஃபஹத். படம்: ஷஹீத் அப்ரார் ஃபஹத் அறநிறுவனம்/ஃபேஸ்புக் -

பங்ளாதேஷ் அரசாங்கத்திற்கு எதிராக சமூக ஊடகத்தில் விமர்சனம் செய்திருந்த இளையர் ஒருவரை 2019ஆம் ஆண்டில் அடித்துக் கொன்ற 20 பல்கலைக்கழக மாணவர்களுக்கு புதன்கிழமை (டிசம்பர் 8) மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தியாவுடன் தண்ணீர் பகிர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்டு இருந்ததற்காக பங்ளாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினாவை விமர்சித்து அப்ரார் ஃபஹத் எனும் 21 வயது இளையர், ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அந்தப் பதிவு வெளியான ஒரு சில மணி நேரத்தில், பல்கலைக்கழக தங்குவிடுதியில் ஃபஹத்தின் சடலம் கண்டறியப்பட்டது.

கிரிக்கெட் மட்டையையும் கூர்மையற்ற பிற பொருள்களையும் கொண்டு 25 மாணவர்கள் ஆறு மணி நேரம் ஃபஹத்தை தாக்கினர். ஆளும் அவாமி லீக்கின் மாணவர் பிரிவில் அந்த மாணவர்கள் உறுப்பினர்களாக இருந்தனர்.

இந்நிலையில், மாணவர்களுக்குத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஃபஹத்தின் தந்தை திரு பரகத் உல்லா, "தீர்ப்பு அளிக்கப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சி. தண்டனை விரைவில் நிறைவேற்றப்படும் என நான் நம்புகிறேன்," என்றார்.

இந்த வழக்கில் எஞ்சிய ஐந்து மாணவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட மாணவர்கள் 20 முதல் 22 வயதிற்குட்பட்டவர்கள். பங்ளாதேஷ் பொறியியல், தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் அவர்கள் பயின்றனர். ஃபஹத்தும் அங்குதான் பயின்றார்.

குறிப்புச் சொற்கள்