ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில், தென் ஆப்பிரிக்காவிலிருந்து சென்ற பயணி ஒருவருக்கு மரபணு மாறிய ஓமிக்ரான் கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குவீன்ஸ்லாந்து சுகாதாரத் துறை அதிகாரிகள் இன்று (டிசம்பர் 8) இதைத் தெரிவித்தார்.
முதலில் அடையாளம் காணப்பட்ட ஓமிக்ரான் வகையில் உள்ள பாதி மரபணுக்கள் இந்த மரபணு மாறிய ஓமிக்ரானில் உள்ளன.
குவீன்ஸ்லாந்தின் தற்காலிகத் தலைமை சுகாதார அதிகாரி பீட்டர் அய்ட்கென் இத்தகவலை செய்தியாளர்களிடம் இன்று (டிசம்பர் 8) அளித்தார்.
தென் ஆப்பிரிக்காவிலிருந்து அந்த மாநிலத்துக்கு வந்த பயணிக்குக் கிருமி தொற்றியிருப்பது கடந்த சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.
திரு ஆய்ட்கென் இந்த மரபணு மாறிய கிருமியை 'ஓமிக்ரான்-மாதிரி' என்று வருணித்தார்.
இந்த ஓமிக்ரான் மாதிரிக் கிருமியை வழக்கமான சோதனைகளில் கண்டுபிடிக்க முடியாது என்று திரு அய்ட்கென் தெரிவித்தார்.
இது ஓமிக்ரான்தான் என்பதை அதிகாரிகள் கண்டறிய போதுமான அளவுக்கு இதில் அவ்வகைக் கிருமியின் மரபணுக்கள் உள்ளன.
ஆனால் இது கடுமையான நோய்க்கு இட்டுச்செல்லுமா என்பதையும் தடுப்பூசிகள் இதற்கு எதிராக வேலை செய்யுமா என்பதையும் தீர்மானிக்கும் அளவுக்குத் தகவல்கள் கிடைக்கவில்லை என்று திரு அய்ட்கென் கூறினார்.

