சிட்னி: காட்டுத் தீ, கனமழை என ஒரே நாளில் இரண்டு எதிரெதிர் இயற்கை சீற்றங்களைச் சமாளிக்க போராடியது ஆஸ்திரேலியா.
நாட்டின் மேற்கு பகுதியை காட்டுத் தீ சூறையாட, கொட்டித் தீர்த்த கனமழையால் கிழக்குப் பகுதி வெள்ளக்காடானது.
அந்நாட்டின் மேற்கில் உள்ள பிரபல சுற்றுலாத்தலமான மார்கரெட் ரிவர் பகுதியில் சில வாரங்களாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது. இதைத்தொடர்ந்து அங்கு காட்டுத் தீ மூண்டது.
இந்த காட்டுத்தீயால் யாருக்கும் எந்த காயமும் இல்லை. வீடுகள் எதுவும் சேதமடையவில்லை.
இருப்பினும், பரந்து எரியும் காட்டுத் தீயால் அப்பகுதியைப் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது.
அவசர எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள நிலையில், குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையே, நியூ சவுத் வேல்ஸ் கடற்கரையையொட்டி காற் றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதனால் கனமழை கொட்டித் தீர்க்க, வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
சிட்னிக்கு தெற்கே உள்ள சில கிராமப்புறங்களில் 24 மணி நேரத்தில் மட்டும் 21 செ.மீ மழை பெய்துள்ளது.
மோசமடைந்து வரும் காலநிலை மாற்றத்தால், கடந்த சில ஆண்டுகளாக வறட்சி, காட்டுத் தீ, வெள்ளம் ஆகியவை ஆஸ்திரேலியாவை ஆட்டிப் படைக்கின்றன.

