தைப்பே: ஒரு மாதத்திற்கும் மேலாக தைவானில் உள்ளூர் கிருமித்தொற்று சம்பவம் பதிவாகாத நிலையில், ஆய்வக ஊழியர் ஒருவருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது.
தைவானின் முன்னணி ஆராய்ச்சி மையத்தில் பணிபுரியும் அந்த 20 வயது பெண்மணி வெளிநாடு எங்கும் செல்லவில்லை என்றும் அவர் மொடர்னா தடுப்பூசி போட்டுக் கொண்டவர் என்றும் சுகாதார அமைச்சர் சொன்னார்.
ஆய்வக எலி ஒன்று அவரைக் கடித்ததாகவும் அதன் காரணமாக அவருக்குக் கிருமி தொற்றி இருக்குமோ என்ற கோணத்தில் ஆராயப்பட்டு வருவதாக கிருமி ஆய்வின் மூத்த அதிகாரி ஒருவர் சொன்னார்.
அப்பெண்ணிற்கு டெல்டா கிருமி தொற்றியிருக்கும் என்று நம்பப்படுவதாக தைவான் அதிகாரிகள் கூறினர்.
கிருமிப் பரவலை முற்றிலும் துடைத்தொழிக்கும் தைவானின் முயற்சிக்குப் பின்னடைவாக இது பார்க்கப்படுகிறது. தைவானில் கிருமித்தொற்று சம்பவம் கடைசியாக நவம்பர் 5ஆம் தேதி பதிவானது.

