செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
19d91e79-2bb7-4925-8c16-2c0e0f4f9030
-

ஆஸ்திரேலியா: 5 முதல் 11 வயது பிள்ளைகளுக்கு ஜனவரியில் தடுப்பூசி

சிட்னி: வரும் ஜனவரி மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் 5 முதல் 11 வயது பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என்று அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார்.

கனடாவில் இருந்த பெறப்பட்ட மருத்துவ பரிசோதனை தகவல்களை ஆய்வு செய்த தடுப்பூசி பரிந்துரைக்கும் குழு, இரண்டு தடுப்பூசிகளுக்கும் இடையில் எட்டு வார இடைவெளி தேவை என்று பரிந்துரைத்துள்ளது. கிருமிப் பரவல் அதிகரிக்கும் சூழலில் இடைவெளியை மூன்று வாரங்களாகக் குறைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மொடர்னா தடுப்பூசி குறித்து ஆராயப்பட்டு வரும் வேளையில், தற்போது பிள்ளைகளுக்கு ஃபைசர் தடுப்பூசி போடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

பூனை, நாய் இறைச்சி விற்பனை நிறுத்தம்

ஹனோய்: வியட்நாமின் பிரபலச் சுற்றுலா நகரமான ஹோய் அன், பூனை மற்றும் நாய் இறைச்சி விற்பனையை படிப்படியாக நிறுத்துவதாக உறுதியளித்துள்ளது.

நான்கு கால் விலங்குகளை அதிகமாக உண்பதில் சீனாவிற்கு அடுத்த இடத்தில் உள்ளது வியட்நாம். அங்கு ஆண்டுக்கு ஐந்து மில்லியன் விலங்குகள் உணவுக்கு இரையாகின்றன.

இந்நிலையில், பூனை, நாய் இறைச்சிகள் விற்பதையும் உண்பதையும் நிறுத்துவது தொடர்பாக 'ஃபோர் பாஸ்' எனும் விலங்கு ஆர்வலர் குழுவுடன் ஹோய் அன் அதிகாரிகள் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர்.

நியூசிலாந்தில் 'வேப்பிங்' மீது ஆர்வம்

வெலிங்டன்: நியூசிலாந்தில் 2027ஆம் ஆண்டு முதல் இளம் தலைமுறையினருக்குப் புகையிலைப் பொருட்களை விற்கத் தடை விதிக்கப்படவுள்ளது. ஆனால் நிக்கோடினை ஆவியாக்கி, அதை உள்ளிழுக்கும் 'வேப்பிங்' இந்த தடைக்கு உட்படாது. எனவே 'வேப்பிங்' பிடிக்கும் ஆர்வம் இளையர்களிடையே அதிகரிக்கும் என்று சுகாதார, புகையிலை எதிர்ப்பு நிபுணர்கள் தெரிவித்தனர். இருப்பினும், புகைபிடிப்பதைவிட 'வேப்பிங்' குறைவான தீங்கு விளைவிக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

19,000 உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடையே சென்ற மாதம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் கால்வாசிக்கும் மேற்பட்டவர்கள் வேப்பிங் பழக்கம் உள்ளதாகவும்

15 விழுக்காட்டினருக்கு சிகரெட் புகைக்கும் பழக்கம் உள்ளதும் தெரியவந்தது.

தைவானை ஆதரிக்க பைடன் அழைப்பு

வா‌ஷிங்டன்: ஜனநாயக அமைப்பை விரும்பும் அனைத்து நாடுகளும் தைவானுக்கு தங்களது ஆதரவை அளிக்குமாறு பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.

சீனாவுக்கு ஆதரவு தெரிவித்து, தைவானுடனான உறவை முறித்துக்கொள்வதாக நிக்காரகுவா நேற்று அறிவித்த நிலையில், பைடன் இவ்வாறு கூறியுள்ளார். நிக்காரகுவாவில் நடைபெற்ற அதிபர் தேர்தல் போலியானது என்பதால், இது அந்நாட்டு மக்களின் முடிவாக இருக்காது என்றார் பைடன்.

தற்போது 14 நாடுகளுடன் மட்டுமே தைவானுக்கு அரசதந்திர உறவு உள்ளது. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுடன் அதிகாரபூர்வமற்ற முறையில் உறவை வலுப்படுத்தியுள்ளது தைவான்.