'ஸூம்' அழைப்பின்போது ஒரே நேரத்தில் 900 ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கிய தலைமை நிர்வாகியின் வேலை கேள்விக்குறி ஆகிவிட்டது.
திரு விஷால் கார்க் உடனடியாக விடுப்பில் சென்றுள்ளதாக அவர் பணியாற்றும் 'பெட்டர்.காம்' எனும் மின்னிலக்க அடைமானக் கடன் நிறுவனம் கூறியுள்ளது.
அது குறித்து நிறுவனம் மின்னஞ்சல் அனுப்பியதாக அமெரிக்காவின் வைஸ் இணையத்தளம் தெரிவித்தது.
அமெரிக்காவையும் இந்தியாவையும் சேர்ந்த ஊழியர்களை ஸூம் செயலியில் திரட்டிய திரு கார்க், சந்தை சரியில்லை, செயல்திறனும் உற்பத்தித் திறனும் இல்லை என்று காரணம் காட்டி அவர்களை வேலையை விட்டு நீக்கினார்.
அதற்கு அவர் எடுத்துக்கொண்ட நேரம் வெறும் மூன்றே நிமிடங்கள்தான்.
பின்னர், ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கிய விதம் தவறு என்று கூறி அவர் மன்னிப்பு கேட்டார்.
'பெட்டர்.காம்' நிறுவனத்தின் நிர்வாக மன்றம், தலைமைத்துவ, கலாசார மதிப்பீட்டைச் செய்ய தன்னிச்சையான மூன்றாவது தரப்பை நியமித்துள்ளதாகவும் கூறப்பட்டது.
திரு கார்க், மின்னஞ்சலில் ஊழியர்களைத் தகாத வார்த்தைகளில் ஏசுவார் என்று வைஸ் கூறியது.
அது மட்டுமல்ல, நிறுவனத்தின் முதலீட்டாளர்களையும் ஏசியதாகக் கூறப்பட்டது.
இந்தியாவில் பிறந்த திரு கார்க், சிறு வயதில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்.

