ஒரே நாளில் பத்து முறை கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டவரால் பேரதிர்ச்சி

ஒரே நாளில் பத்து முறை கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டவரால் பேரதிர்ச்சி

1 mins read
226e8b8d-210c-4927-b1fa-eec3087772eb
நியூசிலாந்தின் ஆக்லாந்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பெண்மணி. கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ் -

வெலிங்டன்: நியூசிலாந்தில் ஆடவர் ஒருவர் ஒரே நாளில் பத்துத் தவணை கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டதாகத் தகவல் வெளியாக, பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோருக்கு நியூசிலாந்து கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அப்படித் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத சிலர், தங்கள் பெயரில் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்குப் பணம் தந்து, அந்த ஆடவரை இணங்கச் செய்ததாகச் சொல்லப்படுகிறது.

இவ்விவகாரத்தை அதிகாரிகள் தீவிரமாக எடுத்துக்கொண்டு, விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

அடையாளம் தெரியாத அந்த ஆடவர், ஒரே நாளில் 10 முறை தடுப்பூசி போட்டுக்கொண்டதாக 'ஸ்டஃப்' சஞ்சிகை இம்மாதம் 11ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது.

"இதனால், அளவிற்கு அதிகமாக தடுப்பூசி போட்டுக்கொண்டவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமலேயே அதனைப் போட்டுக்கொண்டதாக ஆவணத்தில் பெயருள்ளோரும் தங்களை ஆபத்திற்குள்ளாக்கிக் கொண்டுள்ளனர்," என்று நியூசிலாந்து கொவிட்-19 தடுப்பூசித் திட்டப் பேச்சாளர் ஆஸ்ட்ரிட் கூர்னீப் தெரிவித்தார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பரிந்துரைக்கப்பட்ட தவணைகளைக் காட்டிலும் எவரேனும் கூடுதலாக கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால் அவர்கள் உடனே மருத்துவ ஆலோசனையை நாடுமாறு நியூசிலாந்து சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்