ஜெனீவா: ஓமிக்ரான் கிருமி டெல்டாவைவிட வேகமாகப் பரவக்கூடியது என்றும் அதனால் தடுப்பூசியின் செயல்திறன் குறையக்கூடும் என்றும் உலகச் சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் ஓமிக்ரான் கிருமி, குறைந்த பாதிப்பை ஏற்படுத்துவதாக முதற்கட்ட தரவுகள் கூறுவதாக நிறுவனம் சொன்னது.
"டிசம்பர் 9ஆம் தேதி நிலவரப்படி, 63 நாடுகளில் ஓமிக்ரான் தொற்று பரவியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் ஓமிக்ரான் வேகமாக பரவுகிறது. ஆனால் அங்கு டெல்டா கிருமியின் பாதிப்பு குறைவாக உள்ளது. பிரிட்டனில் ஓமிக்ரான் கண்டறியப்பட்டிருந்தாலும் அங்கு டெல்டாவின் பாதிப்பே மேலோங்கி உள்ளது.
"போதுமான தரவுகள் இல்லாததால் ஓமிக்ரான் பரவும் விதம் குறித்தும் அதன் தீவிரம் பற்றியும் எதையும் சொல்ல முடியாது.
"முதல்கட்ட தரவுகள், கிருமி பரவுவதற்கு எதிரான தடுப்பூசியின் செயல்திறனை ஓமிக்ரான் குறைப்பதாகக் கூறுகின்றன. சமூகப் பரவல் உள்ள இடங்களில் ஓமிக்ரான் டெல்டாவை விஞ்சக்கூடும்," என்று உலகச் சுகாதார நிறுவனம் சொன்னது.
ஓமிக்ரான் கிருமி, ஃபைசர்-பயோஎன்டெக் இரு தவணைத் தடுப்பூசியின் நோய்த்தடுப்புத் திறனைக் குறைக்கும் என்றும் அதே வேளையில் மூன்றாவது, கூடுதல் தடுப்பூசி இழந்த நோயெதிர்ப்பாற்றலை மீட்டெடுக்கும் என்றும் இவ்வாரம் வெளியிடப்பட்ட ஆய்வக முடிவுகள் தெரிவிக்கின்றன.
எனவே போதுமான தடுப்பூசிகள் கையிருப்பு வைத்திருக்கும் பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் தங்களது மக்களைத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றன.
ஓமிக்ரானின் பேரலை குறித்து எச்சரித்த பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், டிசம்பர் மாத இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குக் கூடுதல் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்துள்ளார்.
ஓமிக்ரான் தொற்று சம்பவங்கள் வேகமாக அதிகரித்து வருவதாக மருத்துவ ஆலோசகர்கள் எச்சரித்ததைத் தொடர்ந்து கூடுதல் தடுப்பூசி போடும் பணியை ஜான்சன் முடுக்கிவிட்டுள்ளார்.
ஒவ்வோர் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஓமிக்ரான் தொற்று இரட்டிப்பாகி வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஓமிக்ரானுக்கு முதல் பலி
இதற்கிடையே, பிரிட்டனில் ஓமிக்ரான் கிருமித்தொற்று காரணமாக முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக ஜான்சன் அறிவித்துள்ளார்.இது தனக்கு வருத்தமளிப்பதாக அவர் சொன்னார்.
சென்ற நவம்பர் 24ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் முதல் ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டது.

