செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
9d68d44c-cb0f-4e78-a75f-1dcc5e5ddfc0
-

இந்தோனீசியாவில் 6 முதல் 11 வயது பிள்ளைகளுக்குத் தடுப்பூசி

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் 6 முதல் 11 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு இன்று முதல் தடுப்பூசி போடப்படும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. தென்கிழக்காசிய வட்டாரத்தில் சிறு வயது பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போடும் பணியைத் தொடங்கியுள்ள முதல் நாடாகவும் அது விளங்குகிறது.

இந்த வயது பிள்ளைகளுக்கு சினோவேக் தடுப்பூசி போட சென்ற மாதம் அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 26.5 மில்லியன் பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் சொன்னார்.

சீனாவில் அதிகரிக்கும் தொற்று; தொழிற்சாலை உற்பத்தி நிறுத்தம்

ஷாங்காய்: சீனாவின் கிழக்கு ஜெஜியாங் மாநிலத்தில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உற்பத்தியை நிறுத்திவிட்டதாக பல சீன நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

அந்த மாநிலத்தில் டிசம்பர் 6 முதல் 12ஆம் தேதிக்கு உட்பட்ட காலகட்டத்தில் 173 உள்ளூர் தொற்று சம்பவங்கள் பதிவாகின. இந்நிலையில், உள்ளூர் அரசாங்கம் அங்கு கிருமிப் பரவல் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்ததைத் தொடர்ந்து சில நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தின. சீனாவில் நேற்று முன்தினம் 80 உள்ளூர் கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின. அவற்றில் பெரும்பாலானவை உள் மங்கோலியா, ஜெஜியாங், ‌ஷான்ஸி ஆகிய மாநிலங்களில் கண்டறியப்பட்டவையாகும்.

முழுமையான படையெடுப்பு சீனாவிற்கு கடினமாக இருக்கும் என்கிறது தைவான்

தைப்பே: துருப்புகளைத் தரையிறக்குவதில் எதிர்கொள்ளக்கூடிய சிக்கல்களால் தைவான் மீது சீனா முழுமையாகப் படையெடுப்பது என்பது மிகவும் கடினமாக இருக்கும் என்று தைவான் தற்காப்பு அமைச்சு கூறியுள்ளது.

குறுகிய காலத்தில் நிலம், கடல், வான் வழி என ஒரே நேரத்தில் தனது படைகளைத் தரையிறக்குவது என்பது சீனாவால் முடியாத ஒன்று என தைவான் தற்காப்பு அமைச்சின் அறிக்கை கூறுகிறது. தைவானை தனது சொந்த பகுதி என்று உரிமை கொண்டாடும் சீனா, கடந்த இரண்டு ஆண்டுகளாக தைவானுக்கு அருகே தனது ராணுவ நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

தென்கொரியாவிடம் ராணுவ தளவாடங்கள் வாங்குகிறது ஆஸ்திரேலியா

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையே 680 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான தற்காப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதற்காக தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். சுமார் 1 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தின்படி பீரங்கி ஆயுதங்கள், வாகனங்கள், ரேடார்கள் போன்ற ராணுவத் தளவாடங்களைத் தென்கொரிய நிறுவனம் உற்பத்தி செய்து தரவுள்ளது.