பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் சுய பரிசோதனைக் கருவிகள் மூலம் தங்களுக்குக் கிருமித்தொற்று இருப்பதைக் கண்டறிபவர்கள் அது பற்றி சுகாதார அமைச்சிற்குத் தெரியப்படுத்தாமல் இருப்பதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
சரியான தரவுகள் இல்லாமல் கிருமிப் பரவலின் உண்மை நிலைமையை சுகாதார அதிகாரிகளால் தெரிந்துகொள்ள முடியாது என்றும் அவர்கள் எச்சரித்தனர்.
பினாங்கில் தற்போது சராசரியாக 200 முதல் 300 தொற்று சம்பவங்களே பதிவாகின்றன. ஆனால் இதனை தொற்று குறைந்துவிட்டதாக எடுத்துக்கொள்ள முடியாது என்று பினாங்கு நலக் குழுத் தலைவர் பீ பூன் போ சொன்னார்.
ஏனெனில் சமூக அளவில் கண்டறியப்படும் பல தொற்று சம்பவங்கள் சுகாதார அமைச்சில் பதிவாகவில்லை என்கிறார் அவர்.
மலேசிய மருத்துவ சங்கத்தின் தலைவர் கோ கர் சாய், "தொற்று இருப்பதைக் கண்டறிபவர்கள், தாமாகவே குணமடைய முற்படுகிறார்கள். ஆனால் திடீரென உடல்நிலை மோசமடைந்தால் அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்காமல் போகக்கூடும்," என்றார்.
தொற்று உறுதிசெய்யப்படும் பலர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதற்கு மறுத்துவிடுவதாக சொன்னார் பேராக் பகுதி மருத்துவர் சம்சு அம்பியா இஸ்மாயில். குடும்பத்தையும் நண்பர்களையும் பிரிந்திருக்க அவர்கள் விரும்பாதது அதற்கு காரணமாக இருக்கக்கூடும் என்றார் அவர்.
எனவே பல்வேறு காரணங்க ளுக்காக தங்களுக்குத் தொற்று இருப்பதை பலர் அமைச்சிடம் தெரிவிக்காமல் இருக்கக்கூடும் என்றும் அவர் சொன்னார்.

