இறந்துபோனவருக்கு இரண்டாவது தடுப்பூசி!

இறந்துபோனவருக்கு இரண்டாவது தடுப்பூசி!

1 mins read
7fd9fc39-69fc-4663-91e1-4995ad743f3e
கிட்டத்தட்ட ஏழு மாதங்களுக்குமுன் இறந்துவிட்ட மூதாட்டிக்கு அண்மையில் இரண்டாவது கொவிட்-19 தடுப்பூசி போட்டுவிட்டதாக வந்த குறுஞ்செய்தியால் அவரின் மகன் அதிர்ச்சி அடைந்தார். கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ் -

ஜான்சி: கொவிட்-19 தடுப்பூசியின் முதல் தவணையைப் போட்டுக்கொண்டு ஒரு வாரத்திலேயே இறந்துபோன மூதாட்டிக்கு வெற்றிகரமாக இரண்டாவது தவணை போட்டுவிட்டதாக வந்த குறுஞ்செய்தியால் அவருடைய மகன் அதிர்ச்சியடைந்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்சியில் இச்சம்பவம் நிகழ்ந்தது. இதனையடுத்து, சம்பவம் குறித்து விசாரிக்க மாவட்ட நோய்த்தடுப்பு அதிகாரி ஆணை பிறப்பித்துள்ளார்.

அந்த 67 வயது பெண்மணி இவ்வாண்டு ஏப்ரலில் முதலாவது கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார். ஆயினும், அதன்பின் கிட்டத்தட்ட ஒரு வாரத்திலேயே அவர் இறந்துவிட்டார்.

இந்நிலையில், இம்மாதம் 9ஆம் தேதி அவரின் மகனுடைய கைப்பேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், அம்மூதாட்டிக்கு இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவிட்டதாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதுபற்றி விளக்கம் அளிக்கக் கோரி, சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத் தலைமை அதிகாரிக்கு மாவட்ட நோய்த்தடுப்பு அதிகாரி குறிப்பாணை அனுப்பியுள்ளார்.

"இவ்விவகாரத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளோம். குறுஞ்செய்தி தவறுதலாக மாற்றி அனுப்பப்பட்டதா அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்பதைக் கண்டறிய முயல்கிறோம். காரணம் கேட்புக் குறிப்பாணைக்கு (show cause notice) பதில் கிடைத்ததும், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்," என்று மாவட்ட நோய்த்தடுப்பு அதிகாரி தெரிவித்தார்.