நாடு திரும்பும் பயணிகள், குறிப்பிட்ட சில துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் போன்றோர், பயிற்சிபெற்ற ஊழியர்களின் மேற்பார்வையின்கீழ் சுயமாக ஆன்டிஜன் விரைவு பரிசோதனை (ஏஆர்டி) செய்துகொள்ள வேண்டியுள்ளது. இனிவரும் வாரங்களில் அத்தகையோர் இந்தத் தேவையை எளிதில் பூர்த்திசெய்ய முடியும்.
தீவு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் தனியார் விரைவு பரிசோதனை நிலையங்களை அமைக்க பொது மருத்துவர்கள், கடைத்தொகுதி நடத்துநர்கள், ஹோட்டல் குழுமங்கள் ஆகியோருடன் தான் கைகோத்துள்ளதாக சுகாதார அமைச்சு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 14) தெரிவித்தது.
இனிவரும் சில வாரங்களில் குறைந்தது 60 நிலையங்கள் அமைக்கப்படும் என்று அது எதிர்பார்க்கிறது. அப்படியென்றால், அத்தகைய நிலையங்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 120ஆக இரட்டிப்பாகும்.
தற்போது, இங்கு 60 விரைவு பரிசோதனை நிலையங்கள் உள்ளன. ஊழியர்களின் மேற்பார்வையின்கீழ் சுயமாக ஏஆர்டி பரிசோதனை செய்துகொள்ள பொதுமக்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

