ஓமிக்ரான் அச்சம்: மது விற்பனைக்குத் தடைவிதித்த நாடு

ஓமிக்ரான் அச்சம்: மது விற்பனைக்குத் தடைவிதித்த நாடு

1 mins read
50d78573-f2f3-4b97-b1a2-2fd8296ef294
நார்வேயில் நேற்று திங்கட்கிழமை 958 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. படம்: ராய்ட்டர்ஸ் -

ஓஸ்லோ: புதுவகை ஓமிக்ரான் கொவிட்-19 கிருமி பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மதுக்கூடங்களிலும் உணவகங்களிலும் மது விற்பனை செய்ய நார்வே தடை விதித்து இருக்கிறது.

நாளை புதன்கிழமையில் இருந்து இந்தத் தடை நடப்பிற்கு வரவுள்ளது. நான்கு வாரங்களுக்கு இத்தடை நடப்பில் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.

ஓமிக்ரான் அச்சுறுத்தலைத் தொடர்ந்து புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ள நார்வே, தடுப்பூசி போடும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது.

உருமாறிய டெல்டா, ஓமிக்ரான் கிருமிகள் நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை நெருக்கடிக்கு உள்ளாக்கிவிடலாம் என்பதால் நிலைமையைத் தீவிரமாகக் கருத வேண்டும் என்று நார்வே பிரதமர் ஜோனஸ் கர் எச்சரித்துள்ளார்.

"பலரும் இதனை முடக்கநிலையைப்போல் கருதலாம். ஆனால், சமூகத்தைக் காக்க இந்தக் கட்டுப்பாடுகள் முக்கியம். நிலைமை மோசமாக உள்ளது. தொற்றுப் பரவல் மிகவும் அதிகமாக உள்ளது. அதனைக் கட்டுப்படுத்த நாம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்," என்றார் திரு ஜோனஸ்.

அண்மைய நாள்களாக நார்வேயில் இதற்குமுன் இல்லாத அளவில் கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. தலைநகர் ஓஸ்லோவில் 472 பேர் உட்பட நேற்று திங்கட்கிழமை மட்டும் அந்நாட்டில் 958 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக ஏஎஃப்பி செய்தி வெளியிட்டுள்ளது.