கொவிட்-19க்கு எதிராக தடுப்பூசி போட்டிராத பயணிகளை அழைத்து வரும் விமான நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ஆப்பிரிக்க நாடான கானாவின் பிரதான அனைத்துலக விமான நிலையம் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி போட்டிராத ஒவ்வொரு பயணிக்காக, சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்துக்கு 3,500 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்படும். இந்த விதிமுறை செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 14) நடப்புக்கு வந்துள்ளது.
ஆப்பிரிக்காவிலேயே ஆகக் கடுமையான நடைமுறைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. ஆப்பிரிக்காவில் ஓமிக்ரான் திரிபு பரவிவரும் வேளையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய பொருளியல் நாடுகளில் ஒன்றான கானாவின் மக்கள்தொகை 30 மில்லியன். நாட்டு மக்களில் 5 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் தொகுத்துள்ள தரவு தெரிவிக்கிறது.


