ஜகார்த்தா: இந்தோனீசியாவில் பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் நான்கு பேரை அந்நாட்டு பயங்கரவாதத் தடுப்புக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சுமத்ராவின் தென்பகுதியில் உள்ள பெலம்பாங், லுபுக்லிங்காவ் ஆகிய நகரங்களில் அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரும் ஜாமியா இஸ்லாமியா தீவிரவாதக் குழுவுடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது.
அவர்கள் கிறிஸ்மஸ், புத்தாண்டு விடுமுறைக் காலங்களில் பல இடங்களில் தாக்குதல் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்ததாகக் சுமத்ரா காவல்துறை பேச்சாளரும் மூத்த ஆணையாளருமான சுப்ரியாடி, நேற்று முன்தினம் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இதனையடுத்து விடுமுறை காலங்களில் மக்கள் நெருக்கமான பகுதிகள், வழிபாட்டுக் கூடங்கள்ஆகியவற்றில் பாதுகாப்பை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார். இந்த நால்வரின் நடவடிக்கைகளையும் காவல்துறை கடந்த நான்கு மாதங்களாகக் கண்காணித்து வந்ததாகவும், அவர்கள் சந்தேகப்படும் வகையில் அவர்கள் நடவடிக்கை இருந்ததால் கைதுசெய்யப்பட்டனர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார். கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

