ஜகார்த்தா: தென்சீனக் கடல் பகுதியை சொந்தம் கொண்டாடி அப்பகுதியில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடும் சீனாவின் போக்கு அடாவடித்தனமானது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிலிங்கன் சாடியுள்ளார்.
பெய்ஜிங்கின் இந்தப் போக்கை கண்டிக்கும் வகையில் சீனாவுக்கு எதிராகக் குரல் கொடுக்க அமெரிக்காவுடன் ஒன்றிணைய இந்த வட்டார நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
வெளியுறவு அமைச்சராகப் பதவியேற்றபின் முதன்முதலாக ஆசிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிலிங்கன், நேற்று இந்தோனீசியாவில் கொள்கை உரையாற்றினார். அப்போது அவர், "சீனாவின் இந்த வன்மையான போக்கு மாறவேண்டும். இதுவே இந்த வட்டார நாடுகளின் விருப்பம். நாங்களும் அதைத்தான் விரும்புகிறோம்.
"சீனாவின் இந்தப் போக்கால் அந்தக் கடல் பகுதியில் மேற்கொள்ளப்படும் டிரில்லியன் கணக்கான வர்த்தகங்கள் பாதிப்படையக் கூடும். அப்பகுதியில் நடைபெறும் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரம் கட்டிக்காக்கப்பட வேண்டும். இதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
"அமெரிக்கா தன் நட்பு நாடுகளுடன் சேர்ந்து கடல் போக்குவரத்துக்கான விதிகள் மீறப்படாமல் பாதுகாத்து தென்சீனக் கடல் வட்டாரத்தில் சுதந்திரமான கடல் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று திரு பிளிங்கன் கூறினார். தென்சீனக் கடலின் பெரும்பகுதியை சீனா உரிமை கொண்டாடி வருவதோடு, அப்பகுதிகளில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் பிலிப்பீன்ஸ், புருணை, மலேசியா, வியட்னாம், தைவான் ஆகிய நாடுகள் சீனாவின் இந்தப் போக்கைக் கண்டித்து வருகின்றன.