நான்கு உணவகங்களில் உணவருந்திய தம்பதி உட்பட மேலும் மூவருக்கு முதற்கட்டப் பரிசோதனையில் ஓமிக்ரான் தொற்று

நான்கு உணவகங்களில் உணவருந்திய தம்பதி உட்பட மேலும் மூவருக்கு முதற்கட்டப் பரிசோதனையில் ஓமிக்ரான் தொற்று

2 mins read
743ffefd-83c4-41a5-bebc-97efee01b152
அத்தம்பதி இரண்டு நாள்களில் நான்கு உணவகங்களில் உணவருந்தி இருந்தனர். -

சிங்கப்பூரில் மேலும் மூவருக்கு முதற்கட்டப் பரிசோதனையில் ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு புதன்கிழமை (டிசம்பர் 15) இதனைத் தெரிவித்தது.

அம்மூவரும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். அவர்களிடம் தொற்றுக்கான இலேசான அறிகுறிகள் தென்பட்டன, அல்லது அறிகுறிகளே தென்படவில்லை. தேசிய தொற்றுநோய்த் தடுப்பு நிலையத்தில் அவர்கள் குணமடைந்து வருகின்றனர்.

அவர்களில் ஒருவர் 36 வயது ஆடவர். தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணத்தடத் திட்டத்தின்கீழ் அவர் அமெரிக்காவில் இருந்து சிங்கப்பூர் வந்தார்.

டிசம்பர் 6ஆம் தேதி நடத்தப்பட்ட புறப்பாட்டிற்கு முந்திய பரிசோதனையிலும் டிசம்பர் 8ஆம் தேதி அவர் சிங்கப்பூர் வந்திறங்கியவுடனும் நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலும் 'தொற்று இல்லை' எனத் தெரியவந்தது.

எனினும், பயிற்சிபெற்ற ஊழியரின் மேற்பார்வையின்கீழ் டிசம்பர் 10ஆம் தேதி அந்த ஆடவர் செய்துகொண்ட ஏஆர்டி பரிசோதனையில் தொற்று உறுதியானது. அதற்கு அடுத்த நாள் பிசிஆர் பரிசோதனையிலும் அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

முதற்கட்டப் பரிசோதனையில் ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்ட இரண்டாமவர், மேற்கூறப்பட்ட அந்த ஆடவர் மனைவியாவார். அந்த ஆடவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து அந்த 34 வயது மாது

செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 14) தனிமை உத்தரவின்கீழ் வைக்கப்பட்டார். அதே நாள் அவருக்கும் கொவிட்-19 பரிசோதனையில் தொற்று உறுதியானது.

அத்தம்பதி இரண்டு நாள்களில் நான்கு உணவகங்களில் உணவருந்தி இருந்தனர்.

அந்த உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்கள், அத்தம்பதி சென்றிருந்த அதே நேரத்தில் அந்த உணவகங்களுக்குச் சென்றுவந்த வாடிக்கையாளர்கள் ஆகியோருக்கு சுகாதார அபாய எச்சரிக்கை விடுக்கப்படும்.

ஒருமுறை பிசிஆர் பரிசோதனையை நடத்த சுகாதார அமைச்சு அவர்களைத் தொடர்புகொள்ளும்.

முதற்கட்டப் பரிசோதனையில் ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்ட மூன்றாமவர், சாங்கி விமான நிலையம் முனையம் 3ல் பணிபுரியும் ஊழியராவார். விமானப் பயணிகளுடன் அவர் நெருங்கிய தொடர்பில் இருக்கவில்லை.

டிசம்பர் 14ஆம் தேதி அந்த 54 வயது ஆடவர் பிசிஆர் பரிசோதனை செய்துகொண்டார். அதில் தொற்று உறுதியானது.