வாஷிங்டன்: சீனாவைச் சேர்ந்த வலிபோக்கி மருந்துகளைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளியல் தடை விதித்துள்ளது.
நாள்தோறும் நூற்றுக்கணக்கான அமெரிக்கர்கள் இந்த மருந்துகளுக்கு அடிமையாகி உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. இதைத் தடுத்து நிறுத்துவதற்கே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமெரிக்கா தெரிவித்தது. ஓப்பியம் மருந்துக் கலவையுடன் கூடிய இந்த மருந்துகளை அமெரிக்காவுக்குள் கடத்தும் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் பைடன் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதுதொடர்பாக சீனாவைச் சேர்ந்த நான்கு ரசாயன நிறுவனங்களுக்கும் சியூன் ஃபாட் யிப் என்ற தனிப்பட்ட ஆள் ஒருவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் கருவூலத் துறை தெரிவித்தது. சியூன் ஃபாட் யிப் என்பவரைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு ஐந்து மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
சியூன் என்பவரும் அவரது நிறுவனமான 'வூஹான் யுவான்செங் கொக்சுவாங் டெக்னாலஜிஸ்', உடற்குறைப்பு மருந்துக்குப் பயன்படும் 'அனாபொலிக் ஸ்டீராய்ட்ஸ்' மருந்துகளைத் தயாரித்து விநியோகித்து வருகிறது.
இந்த நிறுவனம் சீனாவுக்கு வெளியில் உலக அளவில் செயல்பட்டு வருகிறது.
கடுமையான வலிகளைப் போக்கக் கூடிய மருந்துகளில் ஃபென்டானில், ஸ்டீராய்ட்ஸ் போன்ற போதை மருந்துகளின் கலவையைக் கொண்ட மருந்துகளைத் தயாரித்து வருகிறது.
இந்நிறுவனம் தனது மருந்து விநியோகத்திற்கு பிட்காய்ன் என்னும் மின்னியல் நாணயப் பரிவர்த்தனையைப் பயன்படுத்துவதாக அமெரிக்க கருவூலத் துறை கூறியது. மேலும், மெக்சிக்கோ, பிரேசில் நாடுகளைச் சேர்ந்த இரண்டு போதைப்பொருள் கும்பல்களுக்கும் அமெரிக்கா பொருளியல் தடை விதித்துள்ளது.
பெரும்பாலும் இதுபோன்ற மருந்துகளின் மூலப் பொருள்கள் சீனாவில்தான் தயார் செய்யப்பட்டு வருகின்றன என்று பைடன் நிர்வாகம் தெரிவித்தது.
இந்தப் பொருளியல் தடை, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அமெரிக்கச் சொத்துகளை முடக்க வழிவகுக்கிறது என்றும் கூறப்படுகிறது.

