மணிலா: பிலிப்பீன்ஸில் இவ்வாண்டு முற்பாதியில் மட்டும் கிட்டத்தட்ட நான்கு மில்லியன் மக்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்பட்ட விதிமுறைகளால் வேலை வாய்ப்புகள் குறைந்ததும் உள்ளூர் பொருள்களுக்கான தேவை குறைந்ததும் இதற்குக் காரணங்கள் என்று அரசாங்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
இவ்வாண்டு முற்பாதியில் பிலிப்பீன்ஸில் வறுமையில் தள்ளப்பட்டோரின் விகிதம் 23.7 விழுக்காட்டுக்கு அதிகரித்தது. மூவாண்டுகளுக்கு முன் இதே காலகட்டத்தில் இவ்விகிதம் 21.1 விழுக்காடாக இருந்தது. அப்படியென்றால் ஏற்கெனவே இருந்ததைவிட கூடுதலாக சுமார் 3.9 மில்லியன் மக்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர் என்று பொருள். இந்தப் புள்ளி விவரங்கள் மூவாண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும்.
"கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் சூழல் எங்களின் முன்னேற்றத்தைத் தற்காலிகமாகத் தடுத்தது. 2020ஆம் ஆண்டில் மக்களின் வருமானமும் வேலைகளும் கட்டுப்பாடுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டன," என்று பிலிப்பீன்ஸின் பொருளியல் திட்டங்களுக்கான அமைச்சர் கார்ல் ஹெண்ட்ரிக் சுவா செய்தியாளர் கூட்டம் ஒன்றில் கூறினார்.
கொவிட்-19 தலைதூக்குவதற்கு முன்பு ஆசியாவில் ஆக வேகமாக வளரும் பொருளியல் நாடுகளில் ஒன்றாக பிலிப்பீன்ஸ் இருந்தது. ஆனால், சென்ற ஆண்டு வரலாறு காணாத வகையில் இதன் பொருளியல் 9.6 விழுக்காடு சுருங்கியது. கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த நடப்புக்குக் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகள் வர்த்தகங்களை முடக்கிப் போட்டன. மேலும், குடும்பங்கள் செலவழிப்பதும் குறைந்தது. இது, பொருளியல் வளர்ச்சிக்கு முக்கியமான ஓர் அம்சம்.
எனினும், அண்மைக் காலமாக பிலிப்பீன்ஸில் கிருமிப் பரவல் சூழல் கட்டுக்குள் வந்துள்ளது. பல வர்த்தகங்கள் மீண்டும் இயங்கிவருவதாகவும் கூடுதலானோர் வேலைக்குத் திரும்பியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "2021ஆம் ஆண்டின் பிற்பாதியில் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டு கூடுதலானோருக்குத் தடுப்பூசி போடுவதால் பொருளியல் வளர்ச்சி வலுவடைகிறது, வறுமை விகிதம் குறையும் என எதிர்பார்க்கலாம்," என்று திரு சுவா குறிப்பிட்டார்.
கொள்ளைநோய்ப் பரவல் சூழலால் மில்லியன்கணக்கானோர் அவதிப்படுகின்றனர்

