வடகொரியாவில் சிரிப்பதற்குத் தடை
பியோங்யாங்: வடகொரியாவின் மறைந்த முன்னாள் தலைவர் கிம் ஜோங் இல்லின் 10வது ஆண்டு நிறைவு நாளையொட்டி அந்நாட்டில் சிரிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடை சுமார் 10 நாள்களுக்கு நீடிக்கும்.
மது அருந்துவது, கேளிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவது, கடைகளுக்குச் சென்று அத்தியாவசியப் பொருள்களை வாங்குவது போன்ற நடவடிக்கைகளும் தடைசெய்யப்பட்டுள்ளதாக 'ரேடியோ ஃபிரீ ஏஷியா' எனும் வானொலி நிலையம் தெரிவித்தது. சினுய்ஜு நகரில் வசிக்கும் ஒருவர் இத்தகவல்களை அந்த வானொலி நிலையத்திடம் கொடுத்தார்.
இதய சிகிச்சை பெறும் மகாதீர்
கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது அந்நாட்டின் தேசிய இதயக் கழகத்தில் சில மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டுவருகிறார். நேற்று முன்தினம் அவர் அங்கு அனுமதிக்கப்பட்டார். வரும் நாள்களில் பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று இதயக் கழகம் தெரிவித்தது. அதுவரை டாக்டர் மகாதீர் அங்கு இருப்பார் என்றும் அது குறிப்பிட்டது.
இது குறித்து மேல்விவரம் ஏதும் வெளியிடப்படவில்லை. 96 வயதான டாக்டர் மகாதீருக்கு ஏற்கெனவே இதயத்தில் சில பிரச்சினைகள் இருந்தன. 1989ஆம் ஆண்டில் ஒரு முறையும் 2006ல் இரு முறையும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
சிறுவர்களைப் பலிவாங்கிய விபத்து குறித்து விசாரணை
சிட்னி: சிறுவர்கள் குதித்து விளையாடும் 'பவுன்சி காசல்' எனப்படும் மிதவை சம்பந்தப்பட்ட விபத்து குறித்து ஆஸ்திரேலிய அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.
டாஸ்மேனியா மாநிலத்தின் டெவொன்போர்ட் நகரில் நேற்று முன்தினம் பலத்த காற்றால் சிறுவர்கள் இருந்த மிதவை வீசியெறியப்பட்டது. அதிலிருந்த 11 வயதுக்கும் 12 வயதுக்கும் இடைப்பட்ட ஐந்து சிறுவர்கள் மாண்டனர். மேலும் மூன்று சிறுவர்கள் டாஸ்மேனியா தலைநகர் ஹொபார்ட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கவலைக்கிடமாக இருப்பதாகவும் ஒருவர் வீட்டில் இருந்தபடி குணமடைந்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
விபத்துக்கு உள்ளான மிதவை நிலத்துடன் வலுவாக கட்டப்பட்டிருந்ததா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.
ஜப்பானில் ஓமிக்ரான் தொற்று
தோக்கியோ: ஜப்பானில் முதன்முறையாக உள்ளூரில் ஒருவருக்கு ஓமிக்ரான் வகை கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர், கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டோரை அனுமதித்து கவனிக்கும் நிலையம் ஒன்றில் வேலை செய்யும் 30 வயது பெண்.
ஒசாக்கா நகரின் கன்சாய் அனைத்துலக விமான நிலையத்தில் பயணிகளைத் தனிமைப்படுத்துவதற்கான நிலையத்தில் அப்பெண் வேலை செய்கிறார். அந்நிலையத்தில் பெண்ணின் பொறுப்பு குறித்து தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. அவர் அண்மையில் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளவில்லை என்று ஜப்பானின் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
உலக அழகி தெரிவில் தாமதம்
சான் ஹுவான் (போர்ட்டோ ரிக்கோ): இவ்வாண்டுக்கான உலக அழகிப் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்நிகழ்ச்சியுடன் தொடர்புடைய பலருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 97 அழகிகளில் 23 பேருக்கும் கிருமித்தொற்று ஏற்பட்டது.
இவ்வாண்டின் 'மிஸ் வேர்ல்ட்' உலக அழகிப் போட்டி போர்ட்டோ ரிக்கோவில் நேற்று முன்தினம் நடைபெறவிருந்தது. அதற்கு சில மணிநேரத்திற்கு முன்புதான் ஒத்திவைப்பது குறித்து ஏற்பாட்டாளர்கள் முடிவுசெய்தனர். போட்டியில் பங்கேற்கும் மலேசியாவின் அழகியான லாவண்யா சிவாஜி, கிருமித்தொற்று ஏற்பட்டோரில் ஒருவர். இந்தோனீசியாவின் பிரிசிலியா கார்லா யுலெஸுக்கும் அதே நிலை,
அடுத்த 90 நாள்களுக்குள் போட்டி நடத்தப்படும் என்று அதன் ஏற்பாட்டாளர்கள் குழுவான 'மிஸ் வேர்ல்ட்' அமைப்பு தெரிவித்தது.

