மலேசியாவில் புத்ராஜெயா அருகே 'எலிட்' நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 17) இரவு ஏற்பட்ட சாலை விபத்து ஒன்றில் 10 பேர் உயிரிழந்துவிட்டனர். அவர்களில் எண்மர் பிள்ளைகள்.
இந்த விபத்தில் நசுங்கிய வாகனம் ஒன்றில் இருந்து 'டிரெய்லர்' கனரக வாகனத்தைத் தூக்கி நகர்த்த பாரந்தூக்கி ஒன்றைப் பயன்படுத்த வேண்டியிருந்தது.
இந்த விபத்து குறித்து இரவு 11.42 மணிக்கு தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத் துறை இயக்குநர் நூரஸாம் காமிஸ் தெரிவித்தார்.
"இரவு 11.54 மணிக்கு விபத்து நிகழ்ந்த இடத்துக்கு வந்த மீட்பு ஊழியர்கள், விபத்தில் சிக்கியவர்களை மீட்கத் தொடங்கினர்," என்றார் அவர்.
இந்த விபத்தில் 'டிரெய்லர்' வாகனமும் மூன்று கார்களும் சம்பந்தப்பட்டதாக அவர் கூறினார்.
"ஒரு காரில் இருந்த ஆண் ஓட்டுநர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். அந்த காரில் இருந்த பெண் பயணி உயிர் பிழைத்தார்.
"மற்றொரு காரில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார். மாது ஒருவரும் எட்டு சிறுவர், சிறுமியரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர்," என்று திரு நூரஸாம் கூறினார்.
அந்த எட்டு சிறுவர், சிறுமியரும் அந்த மாதின் பிள்ளைகள் என்றும் அவர்கள் ஏழு மாதம் முதல் 17 வயதிற்குட்பட்டவர்கள் என்றும் மலேசியாவின் பெர்னாமா செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
மூன்றாவது காரில் இருந்த ஆடவர் ஒருவரின் கால் முறிந்தது. அந்த காரில் இருந்த மாது ஒருவருக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டன.
"டிரெய்லர் வாகன ஓட்டுநரும் அதிலிருந்த இரு பிள்ளைகளும் காயங்களின்றி உயிர் தப்பினர்," என்றார் திரு நூரஸாம்.
இந்த விபத்தில், டிரெய்லர் வாகனத்துக்குக்கீழ் கார் ஒன்று சிக்கிக்கொண்டது.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக ஷா அலாம் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக திரு நூரஸாம் தெரிவித்தார்.
மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப், விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார்.

