மலேசியாவில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 17) முதல் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக சிலாங்கூர் உட்பட குறைந்தது ஐந்து மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
சிலாங்கூர், மலாக்கா, கிளந்தான், தெரங்கானு, பாகாங் ஆகிய மாநிலங்கள் கனமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. பாகாங்கில் ஒருவரும் தெரங்கானுவில் ஒருவரும் உயிரிழந்தனர்.
சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக பலர் வேலை முடிந்து தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியவில்லை.
மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள சிலாங்கூரில், ஆயிரக்கணக்கானவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கிள்ளானில் 2,604 பேர் உட்பட சிலாங்கூரைச் சேர்ந்த 3,086 பேர் 17 பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புக் குழு இயக்குநர் நூரஸாம் காமிஸ் கூறியதாக தி ஸ்டார் குறிப்பிட்டுள்ளது.
வெள்ளம் சூழ்ந்ததால், சரக்குகளைக் குறிப்பிட்ட இடங்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் தாமதம் ஏற்படக்கூடும் என்றனர் கிள்ளான் துறைமுக அதிகாரிகள்.
இதற்கிடையே, காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, மலேசியாவின் மேற்கு கடற்கரை, மலாக்கா நீரிணையை ஒட்டிய பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
கிளந்தான், பாகாங்கின் சில பகுதிகளில் கடுமையான கனமழை தொடரும் என்பதால் அங்கு இரண்டாம் நிலை அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர், பாகாங், கிளந்தான் பகுதியில் உள்ள பல ஆறுகளில் நீர்மட்டம் அபாய அளவை எட்டிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

