பாரிஸ்: ஐரோப்பாவில் ஓமிக்ரான் கிருமி 'மின்னல் வேகத்தில் பரவி வருவதாக' பிரெஞ்சு பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் எச்சரித்துள்ளார்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பிரான்சில் ஆதிக்கம் செலுத்தும் உருமாறிய தொற்றாக ஓமிக்ரான் அமையக்கூடும் என்று அவர் கூறினார்.
அண்டை நாடான பிரிட்டனில் இருந்து வருவோருக்கு பிரான்ஸ் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்தக் கட்டுப்பாடுகள் நடப்புக்கு வருவதற்கு ஒரு சில மணி நேரத்துக்கு முன்பு பிரெஞ்சு பிரதமர் ஓமிக்ரான் தொற்று குறித்து எச்சரித்தார்.
ஓமிக்ரான் தொற்று காரணமாக ஐரோப்பாவிலேயே ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடு பிரிட்டன். வெள்ளிக்கிழமையன்று அங்கு கிட்டத்தட்ட 15,000 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதியானது.
பிரான்சில் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ள தொற்று சம்பவங்களில் 10 விழுக்காடு வரை ஓமிக்ரான் உருமாறிய தொற்றாக இருக்கக்கூடும் என்று அதன் சுகாதார அமைச்சர் ஆலிவர் வேரன் சொன்னார்.
இதையடுத்து, புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளும் வாணவேடிக்கையும் பிரான்சில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், மற்றொரு கிருமித்தொற்று அலைக்கு ஐரோப்பிய நாடுகள் தயாராகி வருகின்றன.
தொற்றைக் கட்டுப்படுத்த ஜெர்மனி, நெதர்லாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளில் மேலும் சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இதுவரை சந்திக்காத சவால் ஒன்றுக்கு ஜெர்மனி தயாராக வேண்டும் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறினார்.
இதற்கிடையே, தொற்றைக் கட்டுப்படுத்த நெதர்லாந்து மீண்டும் முடக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டு சுகாதார நிபுணர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கிறிஸ்மஸுக்குப் பிறகு பிரிட்டனும் கட்டுப்பாடுகளைக் கடுமை யாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்புற இடங்களில் மக்கள் ஒன்றுகூடுவதற்கு இரண்டு வார காலத் தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக பெயர் கூற விரும்பாத தகவலை மேற்கோள்காட்டி டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படவில்லை என்றால், நாளொன்றுக்கு 3,000த்திற்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை ஏற்படும் என்கின்றனர் அரசாங்க ஆலோசகர்கள்.

