சிட்னி: ஆஸ்திரேலியாவில் கிருமி தொற்றியவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து மூன்றாவது நாளாக புதிய உச்சத்தை (4,017) எட்டியது. முந்திய நாள் இது 3,820ஆக இருந்தது.
இருப்பினும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார் பிரதமர் ஸ்காட் மோரிசன்.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் நேற்று 2,482 பேரைக் கிருமி தொற்றியது. அங்கு பதிவான ஆக அதிக எண்ணிக்கையாகும் இது.
இவற்றில் பெரும்பாலான தொற்று சம்பவங்கள் ஓமிக்ரான் காரணமாக இருக்கக்கூடும் என்று அம்மாநில சுகாதார அதிகாரிகள் கூறினர்.
விக்டோரியாவில் நேற்று 1,504 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. 84 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
"தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கையைவிட தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையில்தான் இனி கவனம் செலுத்தவேண்டும்.
"26 பேர் மட்டுமே தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதால் நியூ சவுத் வேல்ஸ் மருத்துவமனைகளில் நெருக்கடி இல்லை," என்றார் மோரிசன்.
கிருமித்தொற்று சம்பவங்கள் மளமளவென அதிகரித்து வரும் பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளில் நிலவும் சூழ்நிலை ஆஸ்திரேலியாவில் இல்லை எனவும் அவர் கூறினார்.
இதற்கிடையே, சிட்னி, மெல்பர்ன் செல்லும் தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைத்துலக பயணிகள் தனிமைப்படுத்திக்கொள்ள தேவைஇல்லை என்று நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

