பேங்காக்: தாய்லாந்து சிறையில் இரண்டு நாள்களாக நீடித்த வன்முறையைத் தொடர்ந்து கைதிகள் சிறைச்சாலைக்குத் தீ வைத்தனர்.
கூட்டநெரிசல் மிக்க தாய்லாந்து சிறைச்சாலைகள் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த போராடி வருகின்றன.
இதுவரை 87,000க்கும் மேற்பட்ட சிறைக்கைதிகளுக்கு கிருமி தொற்றியுள்ளதாகவும் 185 கைதிகள் தொற்றுக்குப் பலியாகிவிட்டதாகவும் சிறைத் துறை தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில், தொற்றுக்கு ஆளான கைதிகளைத் தனிமைப்படுத்தக் கோரி சென்ற வியாழக்கிழமை இரவு முதல் கிராபியில் உள்ள சிறைச்சாலையின் 400 கைதிகள் வன்முறையில் ஈடுபட்டு வந்தனர்.
இதைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமை இரவு கைதிகள் தங்கள் படுக்கைகளுக்குத் தீ வைத்தனர். இதுதொடர்பாக 31 பேர் கைது செய்யப்பட்டு அதிக காவல் உள்ள சிறைக்கு மாற்றப்பட்டனர்.
குறிப்பிட்ட அச்சிறையில் உள்ள 2,100க்கும் மேற்பட்ட கைதிகளில் 300 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

