சீனாவின் ஆக அதிக வயது மூதாட்டி மாண்டுவிட்டார்
உரும்கி: சீனாவின் ஆக அதிக வயதானவர் மாண்டுவிட்டார். ஜின்ஸியாங் உய்கர் தன்னாட்சி வட்டாரத்தைச் சேர்ந்த 135 வயதான அலிமிஹான் செயிட்டி எனும் அந்த மூதாட்டி உயிரிழந்துவிட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். 1886ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் தேதி பிறந்த இவர், 2013ஆம் ஆண்டு சீனாவின் ஆக அதிக வயதானவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார். தனது இறுதிமூச்சு வரை இயல்பான வாழ்க்கை வாழ்ந்த அவர், அவ்வப்போது தனது கொள்ளுப் பேரப் பிள்ளைகளையும் கவனித்துக்கொண்டிருந்தார்.
வெளிநாட்டினருக்கு தடை நீட்டிப்பு
தோக்கியோ: வெளிநாட்டினருக்கான பயணத் தடையை ஜப்பான் அடுத்த ஆண்டும் நீட்டிக்கும் என்று பெயர் வெளியிடப்படாத அரசாங்க தகவல்களை மேற்கோள் காட்டி உள்ளூர் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கிருமித்தொற்று தலைவிரித்தாடிய ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு ஜப்பானில் அன்றாட தொற்று சம்பவங்கள் பெருமளவு குறைந்துள்ளபோதும் அங்கு ஓமிக்ரான் அச்சம் நிலவுகிறது. ஜப்பானில் கண்டறியப்பட்டுள்ள 30க்கும் மேற்பட்ட தொற்று சம்பவங்களில் பெரும்பாலானவை விமான நிலைய பரிசோதனையின்போதும் தனிமைப்படுத்தலின்போதும் கண்டறியப்பட்டவை.
காபூலில் மீண்டும் கடவுச்சீட்டு
காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கடவுச்சீட்டு வழங்கும் பணி இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகும் என்று தலிபான் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
தலிபான் அமைப்பு ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து, அதிகரித்து வரும் பொருளாதார, மனிதநேய நெருக்கடியில் இருந்து தப்பித்து வெளிநாட்டிற்குச் செல்வதற்காக, பல்லாயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் கடவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பித்தனர். மலைபோல் விண்ணப்பங்கள் குவிந்த நிலையில் பயோமெட்ரிக் கருவிகள் பழுதடைந்தன. எனவே கடவுச்சீட்டு வழங்குவது நிறுத்தப்பட்டது. தற்போது அனைத்தும் சீர் செய்யப்பட்டுவிட்டதாக கடவுச்சீட்டு துறையின் தலைவர் சொன்னார்.
எரிவாயு கசிவால் விபத்து; பாகிஸ்தானில் 10 பேர் பலி
கராச்சி: பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் ஷெர்ஷா பகுதியில் உள்ள ஒரு வங்கி கட்டடத்தின் அடியில் உள்ள பாதாள கழிவுநீர் கால்வாயில் நேற்று ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 10 பேர் மாண்டுவிட்டனர். காயமடைந்த 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் அருகில் இருந்த பெட்ரோல் நிலையமும் வாகன நிறுத்தத்தில் இருந்த கார்களும் பெருமளவில் சேதமடைந்தன. கழிவுநீர் கால்வாயில் எரிவாயு கசிவு ஏற்பட்டதால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

