கொல்லும் எந்திரன்களை உருவாக்கும் அமெரிக்கா, ரஷ்யா

கொல்லும் எந்திரன்களை உருவாக்கும் அமெரிக்கா, ரஷ்யா

1 mins read
e00bd7b4-09ce-4097-a133-bad47d7ac142
ரஜினி நடித்த எந்திரன் படத்தில் வருவது போல, கொல்லும் திறன்பெற்ற இயந்திர மனிதர்களை அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள் உருவாக்கி சோதித்து வருகின்றன.  முதன்முறையாக பல உலக நாடுகள், கொலை செய்யும் ஆற்றல் பெற்ற இயந்திர மனிதர்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.  -

கொல்லும் தானியங்கி ஆயுத முறைகள் என்று அழைக்கப்படும் கொலை செய்யும் ஆற்றல் பெற்ற இயந்திர மனிதர்களை அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள் உருவாக்கி சோதித்து வருகின்றன.

தாக்குதல் நடத்தலாமா அல்லது கொல்லலாமா என்று தன்னிச்சையாக முடிவு செய்யும் ஆளில்லா விமானங்கள், துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் போன்றவை அதிவேகமாக உருவாக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இவற்றுக்கு வலுவான கட்டுப்பாடுகளோ விதிமுறைகளோ கிடையாது.

சில இயந்திரங்கள் போர்களில்கூட பயன்படுத்தப்பட்டுள்ளன.

அணு ஆற்றல் இல்லாத குறிப்பிட்ட ஆயுதங்கள் குறித்த உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ள பல நாடுகளும் கடந்த வாரம் ஜெனீவாவில் சந்தித்தன.

கொல்லும் ஆற்றல்பெற்ற இயந்திர மனிதர்களுக்குக் கட்டுப்பாடுகள் வேண்டும் என்று முதன்முறையாக அவை வலியுறுத்தின.

ஆனால், அமெரிக்கா, ரஷ்யா உட்பட அந்த ஆயுதங்களை உருவாக்கி வரும் நாடுகள் இதற்கு முட்டுக்கட்டை இட்டன.

அனைத்துத் தரப்புகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று பொதுவான அறிக்கையை விடுத்துவிட்டு, சந்திப்பு முடிவடைந்தது.

இத்தகைய இயந்திரங்களைக் குறைப்பதற்கான நல்ல வாய்ப்பை நாடுகள் தவறவிட்டு விட்டதாக 'கொலை செய்யும் இயந்திரங்களை நிறுத்துவதற்கான இயக்கம்' எனும் ஆயுதக் களைவுக் குழு கூறியது.

வாழ்வா சாவா எனும் முடிவுகளை உணர்கருவிகளிடமும் மென்பொருள்களிடமும் ஒப்படைப்பது அறம் தவறிய செயல் என்று இவ்வகை இயந்திரங்களை எதிர்ப்போர் கூறுகின்றனர்.