தி ஹேக்: ஓமிக்ரான் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஐரோப்பிய நாடுகள் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கி வருகின்றன.
அந்த வகையில் ஐரோப்பாவில் முதல் நாடாக நெதர்லாந்து நேற்று முதல் முழு முடக்கநிலையைக் கொண்டு வந்தது.
ஜனவரி 14ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும் இந்த முடக்கநிலையின்போது அத்தியாவசியமற்ற கடைகள், மதுபானக்கூடங்கள், உடற்பயிற்சிக்கூடங்கள், வெளிப்புற விளையாட்டுகள் ஆகியவை மூடப்பட்டிருக்கும். பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு
உள்ளது.
"விடுமுறை காலத்தில் முடக்கநிலை என்பது அனைவருக்கும் கடினமான ஒன்றாக இருக்கும் என்று தெரியும். நிலைமை மிகவும் மோசமடைவதைத் தவிர்க்க வேண்டுமானால் இந்நடவடிக்கை அவசியம்.
"இல்லையென்றால் ஜனவரி மாதத்தில் நிலைமை கையை மீறிச் சென்றுவிடும்," என்றார் நெதர்லாந்து பிரதமர் மார்ட் ரூட்.
நெதர்லாந்தைத் தவிர வேறு சில ஐரோப்பிய நாடுகளும் பொது இடங்களை மூடியுள்ளன. சில நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ளன.
கூடுதல் தடுப்பூசி போடாத பயணிகளுக்கு ஆஸ்திரியா கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ளது.
டென்மார்க்கில் திரையரங்குகள், பொழுதுபோக்குப் பூங்காக்கள் மூடப்பட்டன.
இதற்கிடையே, பிரிட்டனை அதிக ஆபத்து மிக்க நாடுகள் பட்டியலில் சேர்த்துள்ளது ஜெர்மனி.
எனவே பிரிட்டனில் இருந்து ஜெர்மனி செல்வோர் தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தாலும் இரண்டு வாரத்திற்குத் தனிமைப்படுத்தப்படுவர். அத்துடன் ஜெர்மனியை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் மட்டுமே பிரிட்டனில் இருந்து ஜெர்மனி செல்ல அனுமதிக்கப்படுவர்.
பிரிட்டனில் நேற்று மேலும் 90,418 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஒரே நாளில் அங்கு ஓமிக்ரான் சம்பவங்களும் இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, அங்கு ஒட்டுமொத்தமாக 25,000 பேர் ஓமிக்ரான் தொற்றுக்கு ஆளாகியிருந்தனர். முந்திய நாள் இது 10,000மாக இருந்தது. 1.5 முதல் 3 நாட்களில் ஓமிக்ரான் சம்பவங்கள் இரட்டிப்பாவதாக உலகச் சுகாதார நிறுவனம் கூறியது குறிப்பிடத்தக்கது.
ஓமிக்ரான் இருப்பதாக நம்பப்படுவோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது 85 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
மேலும் அத்தொற்றுக்கு ஆளானவர்கள் என்று நம்பப்படும் ஏழு பேர் மாண்டுவிட்டதாக அரசாங்க தகவல்கள் கூறுகின்றன.
இதற்கிடையே, புதிய கட்டுப்பாடுகள் தவிர்க்கமுடியாதவை என்று கூறியுள்ளார் லண்டன் மேயர் சாதிக் கான். இல்லையென்றால் மருத்துவ சேவைகள் நிலைகுலைந்து போகக்கூடும் என்றார் அவர்.

