செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
4bbca753-11b4-4975-9e8e-ca53d501e657
-

பிலிப்பீன்ஸ் சூறாவளி; பலி உயர்வு

மணிலா: பிலிப்பீன்சில் இந்த ஆண்டில் ஆக மோசமான பாதிப்பை ஏற்படுத்திய சூறாவளிக்குப் பலியானோர் எண்ணிக்கை 75ஆக உயர்ந்துள்ளது. 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் மேலும் 10 பேரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர். தென்சீனக் கடலில் உருவான ராய் சூறாவளி 150 முதல் 200 கி.மீ. வேகத்தில் சென்ற வாரம் பிலிப்பீன்சைத் தாக்கியது. மின்கம்பங்கள், மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டன. பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

விமான விபத்தில் நால்வர் பலி

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் உட்பட நால்வர் உயிரிழந்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் பிரிஸ்பேனுக்கு வடக்குப் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்ததாக குயீன்ஸ்லாந்து போலிசார் கூறினர். விமானி, ஓர் ஆடவர், இரண்டு சிறுவர்களின் சடலங்களை போலிசார் மீட்டனர். உள்ளூர் ஊடகங்களில் வெளியான படங்கள் விமானம் தண்ணீரில் தலைகீழாக கிடப்பதைக் காட்டின.

இதற்கிடையே, 'பவுன்சி கேசில்' எனும் பிள்ளைகள் குதித்து விளையாடும் மிதவை, காற்றில் தூக்கி எறியப்பட்ட சம்பவத்தில் ஆறாவதாக நேற்று மேலும் ஒரு பிள்ளை உயிரிழந்துவிட்டார்.

ஹாங்காங்கில் தேர்தல்

ஹாங்காங்: ஹாங்காங்கில் நேற்று நடைபெற்ற தேர்தலில் மக்கள் வாக்களித்தனர். ஹாங்காங்கில் சீனா தேசிய பாதுகாப்பு சட்டத்தைக் கொண்டு வந்த பிறகு அங்கு நடைபெறும் முதல் தேர்தல் இது. கொவிட்-19 காரணமாக சீனாவில் உள்ள ஹாங்காங் மக்கள் வாக்களிக்க ஏதுவாக முதல்முறையாக எல்லையில் வாக்களிப்பு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 20 பேரைத் தேர்ந்தெடுப்பதற்கான இந்த தேர்தலில் 4.5 மில்லியன் பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தாலும் நேற்று பிற்பகல் 1.30 மணி நிலவரப்படி

14.4 விழுக்காடு வாக்குகளே பதிவாகின.

பிரிட்டனில் இந்துக்களுக்கான முதல் சுடுகாடு

பக்கிங்ஹாம்ஷயர்: இந்துக்களுக்கான முதல் சுடுகாட்டை உருவாக்க பிரிட்டன் அனுமதி அளித்துள்ளது. தென் கிழக்கு இங்கிலாந்தில் பக்கிங்ஹாம்ஷயர் பகுதியில் உள்ள ஸ்வாமி நாராயணன் கோயிலுக்கு அருகில் 15 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த சுடுகாடு அமையவுள்ளது. இங்கு நடைபெறும் இறுதி சடங்கில் சுமார் 500 பேர் வரை கலந்துகொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.