கோலாலம்பூர்: சரவாக் சட்டமன்றத் தேர்தலில் 'ஜிபிஎஸ்' எனும் கபுங்கன் சரவாக் கூட்டணி சாதனை வெற்றி பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து அடுத்த மலேசிய அரசாங்கத்தைத் தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக அக்கூட்டணி உருவெடுத்துள்ளதாக அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
தற்போதைய மலேசிய நாடாளுமன்றத்தில் ஜிபிஎஸ் கூட்டணியின் 18 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
அடுத்த பொதுத் தேர்தலில் சரவாக்கின் 31 நாடாளுமன்ற தொகுதிகளில் ஜிபிஎஸ் கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றும் பட்சத்தில் மேலும் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக அது இருக்கும்.
அதற்கான சாத்தியம் உள்ளதை நடந்து முடிந்த அம்மாநில சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் காட்டுகின்றன.
இன்னும் 17 மாதங்களில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் யாரும் பெரும்பான்மை வெற்றி பெறாவிட்டால், சரவாக் கட்சிகளின் கூட்டணி அதை எளிதில் தீர்மானிக்கும் என்று கூறப்படுகிறது.
2016ஆம் ஆண்டு நடந்த சரவாக் தேர்தலில் 72 இடங்களை மட்டுமே வென்ற ஜிபிஎஸ் கூட்டணி நேற்று முன்தினம் நடந்த தேர்தலில் 82ல் 75 தொகுதிகளைக் கைப்பற்றியது.
எதிர்க்கட்சியான பிஎஸ்பி 4 தொகுதிகளிலும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜசெக 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கின்றன. பிகேஆர் கட்சிக்கு ஒரு தொகுதிகூட கிடைக்கவில்லை.
அதே போல, பக்கத்தான் கூட்டணி சார்பாக போட்டியிட்ட அமனா கட்சியும் எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.

