நியூயார்க்: புதிய ஓமிக்ரான் உருமாறிய கிருமி, ஏற்கெனவே ஆட்டிப்படைக்கும் டெல்டா கிருமி, குளிர்காலம் ஆகியவற்றின் பிடியில் சிக்கியுள்ள நியூயார்க்கில் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆக அதிக கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின.
சனிக்கிழமையன்று அங்கு 21,908 பேர் தொற்றுக்கு ஆளாகினர். முந்திய நாள் 21,027 பேரைக் கிருமி தொற்றியது.
தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 7.53 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இது செப்டம்பர் 22ஆம் தேதி வாக்கில் 2.6 விழுக்காடாக இருந்தது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, 3,909 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்நிலையில், நியூயார்க்கில் கூடுதல் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் வகையில், 40 புதிய தடுப்பூசி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநில ஆளுநர் கேத்தி ஹோசுல் சொன்னார்.
"இனி வரப்போவது கிருமித்தொற்று அலைகளாக இல்லாமல், சுனாமியாக இருக்கக்கூடும்," என்று கொலம்பியா பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் உடல்நல, அவசர மருத்துவத்திற்கான இயக்குநர் மருத்துவர் கிரேக் ஸ்பென்சர் கூறினார்.
14 மாநிலங்களில் கிருமித்தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை முந்திய வாரத்தைவிட 10 விழுக்காடு அதிகரித்துள்ளது.
வரும் வாரங்களில் அமெரிக்காவில் ஓமிக்ரானின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நோய் கட்டுப்பாட்டு, தடுப்பு மைய இயக்குநர் வென்ஸ்கி கூறியுள்ளார்.
எனவே அமெரிக்க மக்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

