தடுப்பூசிகள் ஓமிக்ரான் தொற்றைத் தடுக்கும் சாத்தியம் குறைவு: ஆய்வு

தடுப்பூசிகள் ஓமிக்ரான் தொற்றைத் தடுக்கும் சாத்தியம் குறைவு: ஆய்வு

1 mins read
8caf356c-88fd-4646-92bd-935fde9e036e
படம்: ராய்ட்டர்ஸ் -

உலகின் பெரும்பகுதியில் பயன்படுத்தப்படும் கொவிட்-19 தடுப்பூசிகள், வேகமாகப் பரவிவரும் ஓமிக்ரான் கிருமி தொற்றுவதில் இருந்து மிகச் சிறிய அளவே பாதுகாப்பு வழங்கக்கூடும் என்று முதற்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆனால், ஓமிக்ரான் ஏற்படுத்தக்கூடிய கடுமையான நோய்ப் பாதிப்பில் இருந்து அனைத்து தடுப்பூசிகளும் குறிப்பிடத்தக்க அளவு பாதுகாப்பை வழங்குவதாகத் தெரிகிறது. அதுவே தடுப்பூசித் தயாரிப்பு நிறுவனங்களின் முக்கியமான இலக்கும்கூட.

என்றாலும், பூஸ்டர் தடுப்பூசிகளுடன் கூடிய ஃபைசர், மொடர்னா தடுப்பூசிகளுக்கே தொற்றைத் தடுப்பதில் தொடக்கத்தில் வெற்றி கிடைத்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால், உலகின் பெரும்பகுதியில் இந்தத் தடுப்பூசிகள் மக்களுக்குக் கிடைக்கவில்லை.

இந்நிலையில், ஆஸ்ட்ரஸெனிகா, ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிகளுடன் சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளும் ஓமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்துவதில் அவ்வளவு செயல்திறன் வாய்ந்தவையாக இல்லை என்று ஆரம்பகட்ட ஆய்வு கூறுகிறது.

இத்தகைய தடுப்பூசிகளைக் கொண்டே பல நாடுகள் தங்களது தடுப்பூசித் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதால், கொவிட்-19 பெருந்தொற்று செல்லும் திசையை நிர்ணயிப்பதில் இந்த இடைவெளி பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

உலகம் முழுவதும் இன்னும் பில்லியன் கணக்கானோர் இன்னமும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கையில், தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மளமளவென அதிகரித்தால், எளிதில் பாதிக்கப்படுவோரின் உடல்நலம் மோசமான நிலையை எட்டுவதற்கான சாத்தியம் கூடும். அதோடு, புதுப்புது திரிபுகளும் (variants) உருவெடுப்பதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.