வேலுப்பிள்ளை பிரபாகரன் பயன்படுத்திய ஜீப் இப்போது கொழும்பில்

வேலுப்பிள்ளை பிரபாகரன் பயன்படுத்திய ஜீப் இப்போது கொழும்பில்

2 mins read
eacbb9c0-8874-4158-bad8-81840e5f4ab4
தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பயன்படுத்தி வந்த ஜீப் வாகனத்தை, கொழும்பு புறநகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தற்போது பயன்படுத்தி வருகிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. படம்: இலங்கை ஊடகங்கள் -

மறைந்த தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பயன்படுத்தி வந்த ஜீப்பை, கொழும்பு புறநகர் பகுதியில் வசிக்கும் ஒருவர் தற்போது பயன்படுத்தி வருகிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

கொழும்பு புறநகர் பகுதியான மஹரகமவைச் சேர்ந்த கபில புலத்கே, 50, என்பவர் ஜீப்பை வாங்கி பயன்படுத்தி வருகிறார் என்று தமிழ் மிரர் இணையத்தளம் குறிப்பிட்டது.

இந்த வகை ஜீப்பை முதன்முதலில் அமெரிக்க ராணுவத்தினர் பயன்படுத்தினர்.

1942ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த ஜீப்பை, இரண்டாம் உலகப் போரின்போது இலங்கையில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க அதிகாரிகள் பயன்படுத்தியதாகக் கூறப்பட்டது.

பின்னர் யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் வசித்த சாமுவேல் சின்னத்தம்பி என்பவர் இந்த ஜீப்பை வைத்திருந்தார் என்று இலங்கை ஊடகங்கள் கூறின.

அவரது குடும்பத்தாரிடமிருந்து கைமாறிய அந்த வாகனம் விடுதலைப் புலிகளின் வசம் வந்தது.

அந்த ஜீப்பை, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் அவருடைய நெருங்கிய பாதுகாவலர்கள், மூத்த தலைவர்கள் போன்றோரும் பயன்படுத்தியுள்ளனர் என்றும் கூறப்பட்டது.

இந்த விவரத்தைப் பருத்தித்துறை மக்கள் தம்மிடம் தெரிவித்ததாக ஜீப்பின் தற்போதைய உரிமையாளர் கபில புலத்கே கூறினார்.

இலங்கை உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பிறகு இலங்கை ராணுவம் ஜீப்பை அதன் முந்தைய உரிமையாளரிடம் ஒப்படைக்க முயன்றது.

ஆனால் அவர்கள் அதை வேண்டாம் என்று நிராகரிக்க, கடந்த 2009ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை அந்த ஜீப் பயன்படுத்தப்படாலேயே ஒரு பட்டறையில் இருந்தது.

பின்னர் தற்போதைய உரிமையாளர் ஜீப்பை வாங்கி மறுசீரமைத்தார் என்று கூறப்பட்டது.