உலகளவில் சிங்கப்பூரரின் புகழ்

உலகளவில் சிங்கப்பூரரின் புகழ்

3 mins read
51d88736-48fe-45aa-8fb4-e63fab1d7f35
உலகப் பூப்பந்துப் போட்டியில் தங்கம் வென்ற ஆனந்தத்தில் சிங்கப்பூரின் லோ கியன் இயூ (இடது). படம்: பாட்மிண்டன்ஃபோட்டோகாயமுற்றதால் இந்தப் போட்டியின் காலிறுதி ஆட்டத்திற்குப் பிறகு சக்கர நாற்காலியில் இருந்த இவர், சவாலை ஒரு கை பார்த்து தங்கமகனாக மலர்ந்தார். கீழே உள்ள படம்: லோ கியன் இயூ -
multi-img1 of 2

சிங்­கப்­பூர்: பூப்­பந்து மட்­டு­மின்றி ஒட்­டு­மொத்த விளை­யாட்டு உல­கின் பார்­வையை சிங்­கப்­பூ­ரின் பக்­கம் திருப்­பி­யி­ருக்­கி­றார் இந்­நாட்­டின் பூப்­பந்து வீரர் லோ கியன் இயூ. உலகப் பூப்­பந்­துப் போட்­டி­யில் ஆண்­கள் ஒற்­றை­யர் பிரி­வின் இறு­தி­யாட்­டம் வரை சென்ற முதல் சிங்­கப்­பூ­ரர் என்ற பெரு­மை­யைப் பெற்ற லோ, அத்­து­டன் திருப்­தி­ய­டை­யா­மல் கிண்­ணத்­தை­யும் வேட்­டை­யாடி முத்­திரை பதித்­துள்­ளார்.

நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற ஆண்­கள் ஒற்­றை­யர் பிரிவு இறுதி­யாட்­டத்­தில் இந்­தி­யா­வின் கிடாம்பி ஸ்ரீகாந்தை 21-15, 22-20 எனும் ஆட்­டக்­க­ணக்­கில் லோ வென்­றார். உலகப் பூப்­பந்­துச் சம்­மே­ள­னம் நடத்­தும் இந்த பூப்­பந்­துப் போட்டி 1977ஆம் ஆண்டு தொடங்­கப்­பட்டது. அன்­றி­லி­ருந்து இதில் ஆண்­கள் ஒற்­றை­யர் பிரி­வில் சீனா, இந்­தோ­னீ­சியா, ஜப்­பான், டென்­மார்க் ஆகிய நான்கே நாடு­கள்­தான் கிண்­ணத்தை வென்­றி­ருந்­தன. இப்­போது அவற்­று­டன் ஐந்­தா­வ­தா­கச் சேர்ந்­துள்­ளது சிங்­கப்­பூர்.

"கடின உழைப்­பா­லும் விடா­முயற்சி­யா­லும் சிங்­கப்­பூ­ரின் கொடியை உய­ரப் பறக்­க­வைத்­த­தற்கு நன்றி. நாம் அனை­வ­ரும் உங்­களை எண்­ணிப் பெரு­மைப்­படு­கி­றோம்," என்று சிங்­கப்­பூர் அதி­பர் ஹலிமா யாக்­கோப் ஃபேஸ்புக்­கில் தமது வாழ்த்­து­களைத் தெரி­வித்­துக்­கொண்­டார்.

"வாழ்த்­து­கள், கியன் இயூ! நீங்­கள் சிங்­கப்­பூ­ருக்­குப் பெருமை சேர்த்­தி­ருக்­கி­றீர்­கள். உங்­க­ளின் அடுத்த வெற்­றிக்­காக ஆவ­லா­கக் காத்­தி­ருக்­கி­றோம்," என்று சிங்­கப்­பூர் பிர­த­மர் லீ சியன் லூங்­கும் தமது பாராட்­டு­க­ளைத் தெரி­வித்துக்கொண்டார்.

கடந்த மூன்று மாதங்­களில் உல­கின் ஆகச் சிறந்த 10 பூப்­பந்து வீரர்­களில் ஆறு பேரை வென்­றி­ருக்­கி­றார் லோ. இதன் மூலம் உல­கின் தலை­சி­றந்த பூப்­பந்து வீரர்­களில் ஒரு­வ­ராக இவர் உரு­வெடுத்­துள்­ளார். இப்போட்டியின் அரையிறுதிச் சுற்றில் உல­கத் தர­வரி­சை­யில் முத­லி­டத்தை வகிக்­கும் டென்­மார்க்­கின் ஆண்­டர்ஸ் ஆண்­டோன்­சனை லோ வென்று ரசி­கர்­களை இன்ப அதிர்ச்­சி­யில் ஆழ்த்­தி­னார். இதற்­கு­முன் நடை­பெற்ற காலி­று­தி­யாட்­டத்­தில் காய­முற்­ற­தால் லோ சக்­கர நாற்­கா­லி­யில் நக­ர­வேண்­டிய சூழ­லும் ஏற்­பட்­டது. ஆனால் வெற்றி­யா­ளர்­க­ளி­டம் சாக்­குப்­போக்கு இருக்­காது என்­பதை செய­லில் நிரூ­பித்­துக் காட்­டி­னார்.

லோவின் வெற்­றி­யைப் பல பகுதி­களில் உள்ள இவ­ரது குடும்­பத்­தார் கொண்­டா­டி­னர். மலே­சியா­வின் பினாங்கு மாநி­லத்­தில் உள்ள ஜியார்ஜ் டவுன் பகு­தி­யில் இருக்­கும் லோவின் பெற்­றோ­ரான திரு­வாட்டி கிரேஸ் கான், திரு லோ பின் கியட் இரு­வ­ரும் இறு­தி­யாட்­டத்தை மிக­வும் ஆவ­ல­ாகப் பார்த்­துக்­கொண்­டி­ருந்­த­னர்.

அரை­யி­று­தி­யாட்­டத்­திற்­குப் பிறகு தான் அனுப்­பிய குறுந்­தகவலுக்­குத் தனது மகன் பதி­ல­ளிக்­க­வில்லை என்­றார் 57 வயது திரு­வாட்டி கான். "அது நல்­லது. அவர் முழு கவ­னத்­து­டன் இருக்­கி­றார் என்று அர்த்­தம், யாரா­லும் தனது கவ­னம் சித­றா­மல் பார்த்­துக்­கொள்­கி­றார் என்று பொருள்," எனத் திரு­வாட்டி கான் சொன்­னார்.

லோவின் பெற்­றோ­ரு­டன் இவ­ரது சகோ­த­ர­ரான 30 வயது கியன் வெய், இவர்­க­ளின் குடும்ப நண்­ப­ரான கே. ஹெச். ஓங் ஆகி­யோ­ரும் சேர்ந்து வெற்­றி­யைக் கொண்­டா­டி­னர்.

தற்­போது 24 வய­தா­கும் லோ, 2010ஆம் ஆண்டு பினாங்­கி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு வந்­தார். சிங்­கப்­பூர் விளை­யாட்­டுப் பள்­ளி­யில் சேர்ந்­து­கொள்ள மலே­சி­யா­வி­லி­ருந்து வந்த இவர், ஐந்து ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு சிங்­கப்­பூர் குடி­ம­க­னா­னார்.

இவ­ரின் மற்­றொரு சகோ­த­ர­ரான 26 கியன் ஹியன், அங் மோ கியோ­வில் வசிக்­கி­றார். லோவைப் போல் கியன் ஹியன்­னும் ஒரு பூப்­பந்து வீரர், சிங்­கப்­பூர் குடி­ம­கன்.

"நாங்­கள் சிறு­வர்­க­ளாக இருந்­த­போது பயிற்­று­விப்­பா­ளர்­கள்... ஏன் பெற்­றோ­ரும்­கூட கேட்பர், பூப்­பந்­தில் எங்­க­ளின் இலக்கு என்­ன­வென்று, உலக விருதை வெல்­வதே என்று பதி­ல­ளிப்­போம்," என்று கூறிய தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டு­களில் பல கிண்­ணங்­களை வென்­றுள்ள கியன் ஹியன், "அது உண்­மை­யி­லேயே நடக்­கும் என்று யார் நினைத்­துப் பார்த்­தி­ருப்­பார்," என்று மிக­வும் பெரு­மைப்­பட்­டார்.

லோவின் குடும்­பத்­தார் மட்­டு­மல்ல, சிங்­கப்­பூ­ரின் இதர விளை­யாட்டு வீரர்­கள், பொது­மக்­கள் உள்­ளிட்­டோ­ரும் இவ­ரைத் தங்­க­ளின் தங்­க­ம­க­னாக எண்ணி தங்­க­ளின் வாழ்த்­து­க­ளை­யும் பாராட்­டு­க­ளை­யும் குவித்­த­னர். அனைத்­து­லக அள­வில் பூப்­பந்­தில் 10 ஆண்­டு­க­ளுக்­கும் மேல் காணாத சாக­சத்தை அனு­ப­வித்­துள்­ளது சிங்­கப்­பூர்.