காற்பந்துத் துளிகள்

காற்பந்துத் துளிகள்

2 mins read
6169772d-2f06-4ddf-bad0-69c8e958fd07
-

வெற்றிநடைபோடும் சிட்டி

நியூகாசல்: நிலைமை என்னவாக இருந்தாலும், இதர அணிகள் என்ன செய்தாலும் தான் சிறப்பாக ஆடுவதில் தொடர்ந்து கவனம் செலுத்திவருகிறது இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து அணியான மான்செஸ்டர் சிட்டி. நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நியூகாசல் யுனைடெட்டை 4-0 எனும் கோல் கணக்கில் வென்று முதலிடத்தை சிட்டி வலுப்படுத்திக்கொண்டது. கடந்த இரண்டு லீக் ஆட்டங்களில் 11 கோல்களைப் போட்டிருக்கும் சிட்டி, மூன்று புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடத்தை வகிக்கிறது.

கவனம் இழந்த லிவர்பூல், செல்சி

லண்டன்: பிரிமியர் லீக்கில் இரண்டாம் இடத்தில் உள்ள லிவர்பூலும், மூன்றாவது இடத்தில் உள்ள செல்சியும் தங்களின் ஆட்டங்களை வெல்லத் தவறின. லிவர்பூலும் டாட்டன்ஹம் ஹாட்ஸ்பரும் மோதிய விறுவிறுப்பான ஆட்டம், 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. செல்சியும் வுல்வர்ஹேம்ப்டன் வாண்டரர்ஸும் பொருதிய ஆட்டம் கோலின்றி சமநிலையில் முடிந்தது. தொடர்ந்து கவனத்துடன் ஆடமுடியாததுதான் இவ்விரு அணிகளுக்கும் சிட்டிக்கும் உள்ள வித்தியாசம்.

மேலே உள்ள படத்தில் லிவர்பூலின் ஜொவெல் மேட்டிப் (இடது), ஸ்பர்ஸின் ஹேரி கேன். படம்: ராய்ட்டர்ஸ்

சூடுபிடிக்கும் சுசுகி கிண்ணம்

சிங்கப்பூர்: தென்கிழக்காசியாவின் தேசிய காற்பந்து அணிகளுக்கான இவ்வாண்டின் சுசுகி கிண்ணப் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் மோதவிருக்கின்றன, சென்ற போட்டியில் முதல் சுற்றைத் தாண்டாத இரு அணிகளான சிங்கப்பூரும் இந்தோனீசியாவும். 'பி' பிரிவில் மலேசியாவை 4-1 எனும் கோல் கணக்கில் வென்று அரையிறுதிச் சுற்றுக்கு இந்தோனீசியா முன்னேறியது. கடந்த மூன்று சுசுகி கிண்ணப் போட்டிகளில் சிங்கப்பூர் முதல் சுற்றைத் தாண்டவில்லை. மற்றோர் அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு வெற்றியாளரான வியட்நாமும் தாய்லாந்தும் மோதும். 'பி' பிரிவில் கம்போடியாவை 4-0 எனும் கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்குத் தகுதிபெறுவதை உறுதிப்படுத்தியது வியட்நாம். அரையிறுதி ஆட்டங்கள் நாளை தொடங்கும்.