ஓமிக்ரான் அச்சம்: புக்கிட் தீமா உடலுறுதி நிலையத்திற்குச் செல்வோர் குறைவு

ஓமிக்ரான் அச்சம்: புக்கிட் தீமா உடலுறுதி நிலையத்திற்குச் செல்வோர் குறைவு

2 mins read
6229f652-e200-4eee-aa4e-276a748c2f13
புக்கிட் தீமா ஷாப்பிங் சென்டரில் இருக்கும் 'த எனிடைம் ஃபிட்னஸ்' உடலுறுதி நிலையத்திற்குள் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 21) நுழையும் ஆடவர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

புக்கிட் தீமாவில் இருக்கும் 'த எனிடைம் ஃபிட்னஸ்' என்ற உடலுறுதி நிலையம் சுத்தப்படுத்தப்பட்டு தொடர்ந்து செயல்படுகிறது.

என்றாலும், கிருமித்தொற்று அச்சம் காரணமாக சிலர் இப்போது அங்கு செல்லத் தயங்குகிறார்கள்.

அந்த நிலையத்தில்தான் சிங்கப்பூரின் முதலாவது ஓமிக்ரான் தொற்றுக் குழுமம் தலைகாட்டி இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

அந்த நிலையத்துக்கு வந்துசென்ற இருவருக்கு ஓமிக்ரான் தொற்று இருப்பதாக முதற்கட்ட பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது என்று சுகாதார அமைச்சு திங்கட்கிழமை (டிசம்பர் 20) பின்னிரவு அறிவித்து இருந்தது.

மூன்றாவது நபரின் பரிசோதனை முடிவு இன்னும் வெளிவரவில்லை.

சிங்கப்பூரில் இதுவரை 71 பேருக்கு ஓமிக்ரான் தொற்று ஏற்பட்டு இருக்கிறது.

அவர்களில் 65 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். ஆறு பேர் உள்ளூர் மக்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வேளையில், புக்கிட் தீமா ஷாப்பிங் சென்டரில் செயல்படும் இந்த உடலுறுதி நிலையம் மேலும் ஒருமுறை சுத்தப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் அந்த மூவரும் முற்றிலும் தடுப்பூசி

போட்டுக்கொண்டவர்கள். அவர்கள் மூவருக்கும் லேசான அறிகுறிகளே இருந்தன.

சென்ற புதன்கிழமைக்கும் வெள்ளிக்கிழமைக்கும் இடையில் அந்த நிலையத்திற்கு அவர்கள் வந்துசென்றனர்.

அவர்களில் இருவர், 21 முதல் 24 வரை வயதுள்ள ஆடவர்கள். 18 வயது நீ ஆன் பலதுறை தொழிற்கல்லூரி மாணவர் ஒருவரும் அவர்களில் அடங்குவார்.

அந்த மூவரும் சொந்தமாக அந்த நிலையத்தில் பயிற்சி மேற்கொண்டவர்கள் என்றும் அவர்கள் வகுப்பு எதிலும் கலந்துகொள்ளவில்லை என்றும் அந்த நிலையப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

உடலுறுதி நிலையத்திற்குச் செல்வோர் முகக்கவசம் இல்லாமல் உடற்பயிற்சியில் ஈடுபட முடியும்.

இவ்வேளையில், செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 21) காலை 10 மணியளவில் அந்த நிலையத்தில் இருவர் மட்டுமே இருந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.

உடற்பயிற்சி சாதனங்களைக் கிருமிநாசினி தெளித்து ஊழியர்கள் சுத்தப்படுத்திக்கொண்டு இருந்தார்கள்.