கடையில் கொள்ளை அடித்தவர்களை மன்னித்த உரிமையாளர்

கடையில் கொள்ளை அடித்தவர்களை மன்னித்த உரிமையாளர்

2 mins read
54fbad0a-d47e-400b-a381-6df2b29dca21
ஷா அலாம், தாமான் ஸ்ரீ முடாவில் மைதீன் பேரங்காடிக்கடை கிளையில் ஆட்கள் புகுந்து பல பொருள்களை எடுத்துச் சென்றனர். அவர்களை மன்னித்துவிட்டதாக செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 21) அன்று கூறினார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அமீர் அலி மைதீன். படம்: மலேசிய ஊடகங்கள் -

மலேசிய வெள்ளத்தின்போது பேரங்காடிக் கடை ஒன்றில் புகுந்து கொள்ளை அடித்தவர்களை மன்னித்துவிட்டதாக அதன் உரிமையாளர் கூறியுள்ளார்.

மலேசியாவில் பல்லாண்டுகளாக பேரங்காடிக் கடைகளை மைதீன் முகமது நிறுவனம் நடத்திவருகிறது.

அதன் தாமான் ஸ்ரீ முடா கிளையில் பலர், திங்கட்கிழமை (டிசம்பர் 20) அன்று புகுந்து பொருள்களை எடுத்துச்சென்றனர்.

அதன் தொடர்பில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 21) அன்று அதன் நிர்வாக இயக்குநரான அமீர் அலி மைதீன் அறிக்கை ஒன்றை விடுத்தார்.

"அவர்கள் திருடியதை நான் ஆதரிக்கவில்லை. ஆனால் அவசரகாலத்தில் அவர்களுக்கு வேறு வழி இருந்திருக்காது. உயிர்பிழைப்பதற்காக அவர்கள் அந்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கலாம்," என்று திரு அமீர் அலி அதில் கூறினார்.

"அவர்கள் உயிருடன் இருக்க முயன்றுகொண்டிருந்தனர். அதே நேரத்தில் அவர்களுக்கு உதவியும் தாமதமாகச் சென்று சேர்ந்தது. அதனால் அவர்களை மன்னிக்கிறேன்," என்றார் அவர்.

சிலாங்கூர் மாநிலத்தின் ஷா அலாம் பகுதியில் உள்ள தாமான் ஸ்ரீ முடாவில் கொள்ளைச் சம்பவம் நடந்தது.

மைதீன் கடையைத் தவிர வேறுசில பேரங்காடிக் கடைகளிலும் ஆட்கள் புகுந்து பொருள்களை எடுத்துச் சென்றனர்.

அவற்றில் மைதீன் பேரங்காடிக் கடையின் கிளையும் ஒன்று.

கொள்ளையர்கள் கத்திகளையும் பாராங் கத்திகளையும் வைத்திருந்ததாகக் கூறப்பட்டது.

கொள்ளையில் 200,000 முதல் 300,000 ரிங்கிட் மதிப்புள்ள பொருள்கள் பறிபோனதாகவும் விலை உயர்ந்த கடிகாரங்கள், மின்சாரச் சாதனங்கள் போன்றவற்றைக் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றதாகவும் திரு அமீர் அலி கூறியிருந்தார்.

கொள்ளைச் சம்பவம் பற்றி போலிசில் புகார் அளிக்கப்போவதாகவும் முன்னதாகக் குறிப்பிட்ட அவர், இப்போது தமது மனதை மாற்றிக் கொண்டார்.