69 வயது முதியவருக்கு தீ மூட்டிய 67 வயது நபர்; 3 மணிநேரம் போராடிய 120 தீயணைப்பாளர்கள்

69 வயது முதியவருக்கு தீ மூட்டிய 67 வயது நபர்; 3 மணிநேரம் போராடிய 120 தீயணைப்பாளர்கள்

1 mins read
c901faf6-cca1-4ca9-b4a8-189d98dc6c87
ஹாங்காங்கில் நடந்த தீச்சம்பவத்தில் கடுமையாகக் காயமடைந்த 69 வயது முதியவர் உயிருக்காகப் போராடி வருகிறார். தீயை அணைக்க 120 தீயணைப்பாளர்கள் சேர்ந்து மூன்று மணிநேரம் போராடினர்.  படம்: சவுத் சைனா மார்னிங் போஸ்ட் -

ஒரே வீட்டில் வாடகைக்கு இருந்த இரண்டு முதியவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அதில் ஒருவர் இன்னொருவருக்கு தீ மூட்டினார்.

தீயை அணைக்க 120 தீயணைப்பாளர்கள் சேர்ந்து மூன்று மணிநேரம் போராடினர்.

ஹாங்காங்கில் நடந்த தீச்சம்பவத்தில் கடுமையாகக் காயமடைந்த 69 வயது முதியவர் உயிருக்காகப் போராடி வருகிறார்.

தீச்சம்பவம், மா யாவ் டோங் எனும் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் திங்கட்கிழமை (டிசம்பர் 20) இரவு ஏற்பட்டது.

சம்பவத்தின் தொடர்பில், காயமடைந்த முதியவருடன் ஒரே வீட்டில் வாடகைக்குத் தங்கியிருந்த 67 வயது நபரை போலிசார் கைது செய்துள்ளனர்.

அவருக்கும் பாதிக்கப்பட்ட 69 வயது முதியவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அந்த இருவரில் ஒருவர் வைத்திருந்த நாய் குறித்து அந்த வாக்குவாதம் நடந்தது.

அப்போது 69 வயது முதியவர் மீது எரிமத்தை வீசிய சந்தேக நபர், அவருக்குத் தீ மூட்டியதாகக் கூறப்பட்டது.

சம்பவ இடத்துக்கு 27 தீயணைப்பு வாகனங்களும் நான்கு ஆம்புலன்சுகளும் வரவழைக்கப்பட்டன.

தீச்சம்பவம் ஏற்பட்ட வீட்டுக்கு அருகே தண்ணீர்க் குழாய்கள் இல்லாததால், தீ மேலும் கொழுந்து விட்டு எரிந்ததாகக் கூறப்பட்டது.

அந்த 69 வயது நபருக்கு தலை, கைகள், கால்கள் ஆகியவற்றில் கடும் காயம் ஏற்பட்டது.

அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.