சிட்னி: ஆஸ்திரேலியாவில் ஓமிக்ரான் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் கொவிட்-19 கட்டுப்பாடுகளை மீண்டும் அமல் படுத்த வேண்டும் என்ற அைற கூவல் எழுந்துள்ளது.
இது பற்றி விவாதிக்க மாநில அரசுகளுடன் பிரதமர் ஸ்காட் மோரிசன் அவசரக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
எளிதில் பரவக்கூடிய ஓமிக்ரான் கிருமியால் நாட்டில் தொற்றுச் சம்பவங்கள் வெகுவாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி பிற்பாதியில் பிப்ரவரி முற்பகுதியில் தொற்றுச் சம்பவங்கள் 200,000ஐ தொடும் என்று டேஹெர்டி கழகத்தின் பகுப்பாய்வு கூறுகிறது.
இது, ஆஸ்திரேலியாவின் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் ஒரு விழுக்காடாகும்.
கூடுதல் தடுப்பூசிகள் மட்டுமே அதிவேகத்தில் பரவும் ஓமிக்ரானைத்தடுத்து நிறுத்த முடியாது என்று அந்தக் கழகம் கூறியது.
மக்கள்தொகை அதிகமுள்ள நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தில் நேற்று உள்ளூரில் 3,057 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்த மாநிலத்தில் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒருமுறை தொற்று எண்ணிக்கை இரட்டிப்பாகி வருகிறது.
ஆஸ்திரேலியா, முந்தைய தொற்றுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தியிருந்தாலும் தற்போதைய ஓமிக்ரான் கிருமி புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வேளையில் அடுத்த சில நாட்களில் விடுமுறைக் காலம் தொடங்குகிறது.
அண்மையில் மாநில எல்லைகள் திறக்கப்பட்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் ஆஸ்திரேலியர்கள் விடுமுறைக்குத் திட்டமிட்டுள்ளனர்.
அவர்கள் மாநிலங்களுக்கு இடையே பயணங்களை மேற்கொள்ளவிருக்கின்றனர்.
நாடு முழுவதும் கிறிஸ்மஸ் விருந்துகளும் களைகட்டத் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் ஓமிக்ரான் புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் கட்டாய முகக்கவசம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஆஸ்திரேலிய மருத்துவர்கள், ஓமிக்ரான் தொற்று அதிகரித்துள்ள மாநிலங்களில் கட்டாயச் சோதனை, முகக் கவசம், ஓன்றுகூட வரம்பு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் சில அரசியல்வாதிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

