ஹெலிகாப்டர் விபத்து; 12 மணி நேரம் நீந்தி கரைக்குத் திரும்பிய அமைச்சர்

ஹெலிகாப்டர் விபத்து; 12 மணி நேரம் நீந்தி கரைக்குத் திரும்பிய அமைச்சர்

1 mins read
1100ad4f-e9d8-4c86-a31b-620eae4a80d7
படம்: ஆன்ட்ரி ராஜோலினா/டுவிட்டர் -

அமைச்சர் ஒருவர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, கடலில் 12 மணி நேரம் நீந்தி அவர் கரையைச் சேர்ந்த அதிசய சம்பவம் கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் நிகழ்ந்தது.

திங்கட்கிழமை (டிசம்பர் 20) ஏற்பட்ட இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்று காவல்துறையும் துறைமுக ஆணையமும் கூறின.

அமைச்சர் செர்ஜே கேலேயும் காவல் அதிகாரி ஒருவரும் கடலில் நீந்தி செவ்வாய்க்கிழமை காலை மஹாம்போ எனும் தீவை தனித்தனியாக சென்றடைந்தனர்.

அங்கு அவரை மீட்ட மஹாம்போ மக்களிடம், தான் உயிருடன் இருப்பதாக காணொளிப் பதிவு ஒன்றை செய்யக் கூறிய திரு கேலே, அதை அதிகாரிகளுக்கு அனுப்பி தகவல் தெரிவித்தார்.

"நான் திங்கட்கிழமை இரவு 7.30 மணிக்கு நீந்த ஆரம்பித்து, மறுநாள் காலை 7.30 மணிக்கு தீவை சென்றடைந்தேன். என் நாட்டு மக்களுக்கும் அரசுக்கும் என் குடும்பத்தினருக்கும் நான் உயிரோடு இருக்கிறேன் என்பதைச் சொல்லவே இந்தக் காணொளியைப் பதிவு செய்கிறேன்.

"நான் இறப்பதற்கான நேரம் இன்னும் வரவில்லை," என்று திரு கேலே கூறினார்.

ஹெலிகாப்டரின் இருக்கையை திரு கேலே மிதவையாகப் பயன்படுத்தியதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நாட்டின் கிழக்குப் பகுதியில் பயணப் படகு ஒன்று சில தினங்களுக்குமுன் மூழ்கியது. அதில் குறைந்தது 39 பேர் உயிரிழந்தனர்.

படகு விபத்து நிகழ்ந்த இடத்தைப் பார்வையிட பாதுகாப்பு அதிகாரிகளுடன் அமைச்சர் கேலே ஹெலிகாப்டரில் சென்றபோது அது விபத்துக்குள்ளானது.