பட்டத்தைப் பறக்கவிட மாஞ்சா நூல்களைப் பயன்படுத்துவதால், வாகனத்தில் செல்வோரின் உயிருக்குத்தான் ஆபத்து நேரிடும். ஆனால், இலங்கையில் வழக்கத்திற்கு மாறான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் இளையர்கள் சிலர் சேர்ந்து வீட்டில் தயாரித்த ராட்சதப் பட்டங்களை நூலோடு இணைத்து பறக்கவிட்டனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக, இளையர் ஒருவர் பட்டத்தின் நூலைப் பிடிக்க முற்பட்டார். ஆனால் அந்த நூல், அந்த இளையரைத் தூக்கியபடி வானத்தில் பறக்கத் தொடங்கியது.
அந்தப் பட்டம் காற்றின் வேகத்தால் மெலெழும்ப, அந்த இளையரும் வானில் பறந்தபடி, தம் உயிரை நூலில் பிடித்துக்கொண்டார். பட்டம் பறக்கவிட்டுக்கொண்டு இருந்த சக இளையர்கள், என்ன செய்வதறியாது திகைத்தபடி பார்த்தனர்.
ஒருவழியாக, நூலைப்பிடித்துக் தொங்கிக்கொண்டிருந்த அந்த இளையர், பட்டம் சற்று தாழ்வாகப் பறந்தபோது கீழே குதித்துவிட்டார். அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.
இந்த காட்சியை அங்கிருந்த ஒருவர் தம் கைப்பேசியில் படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் அதைப் பதிவேற்றம் செய்தார். அக்காணொளி தற்போது வேகமாகப் பரவி வருகிறது.


