பரிசோதனை செய்யாத 'விடிஎல்' பயணிகள் மீது நடவடிக்கை

பரிசோதனை செய்யாத 'விடிஎல்' பயணிகள் மீது நடவடிக்கை

1 mins read
aaf42d48-e846-4c03-99be-486850e7003e
சிங்கப்பூர் வந்திறங்கிய பின்னர் மூன்றாவது நாளிலும் ஏழாவது நாளிலும் கண்காணிக்கப்பட்ட ஏஆர்டி பரிசோதனை நிலையத்திற்குச் செல்லவேண்டும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

விடிஎல் எனப்படும் 'தடுப்பூசி போட்டோருக்கான பயணப் பாதைகள்' திட்டத்தின்கீழ் சிங்கப்பூருக்குள் நுழையும் சிங்கப்பூரர்கள் உள்ளிட்ட எல்லாப் பயணிகளும் கொவிட்-19 பரிசோதனைகளை முறையாகச் செய்யத் தவறினால் கடுமையான அமலாக்க நடவடிக்கையை அவர்கள் எதிர்நோக்க வேண்டி இருக்கும்.

ஓமிக்ரான் தொற்று அச்சுறுத்தல் அதிகரித்துவரும் நிலையில் இந்த எச்சரிக்கையை சுகாதார அமைச்சு விடுத்துள்ளது.

இந்தப் பயணிகள் ஒவ்வொரு நாளும் வெளிப்புற நடவடிக்கைகளுக்குச் செல்வதற்கு முன்னர் ஏஆர்டி எனப்படும் ஆண்டிஜென் விரைவுப் பரிசோதனையை சுயமாகச் செய்துகொள்ள வேண்டும். தொற்று இல்லை என்ற முடிவைப் பெற்ற பின்னரே அவர்கள் வெளியில் செல்லவேண்டும்.

சிங்கப்பூர் வந்திறங்கிய பின்னர் மூன்றாவது நாளிலும் ஏழாவது நாளிலும் கண்காணிக்கப்பட்ட ஏஆர்டி பரிசோதனை நிலையத்திற்குச் செல்லவேண்டும்.

அதற்காக வெளியே செல்லும்முன் சுயபரிசோதனை செய்துகொள்வதில் இருந்து அந்த நாள்களில் மட்டும் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.

பயணிகள் ஏஆர்டி பரிசோதனை செய்துகொள்வதும் அதன் முடிவுகளை அதற்காகத் தரப்பட்ட கால இடைவெளியில் அமைச்சிடம் சமர்ப்பிப்பதும் அவசியம் என அமைச்சு தெரிவித்தது.

"பரிசோதனை செய்துகொள்ளாத பயணிகளுக்கும் பரிசோதனை முடிவுகளைச் சமர்ப்பிக்கத் தவறும் பயணிகளுக்கும் இல்லத் தனிமை உத்தரவு பிறப்பிக்கப்படும். மேலும் தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்க நடவடிக்கைகளை அவர்கள் எதிர்நோக்க வேண்டியிருக்கும்," என்று அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.