கிள்ளாங்: தனது குடும்பம் வெள்ளத்தில் சிக்கித் தவித்தபோது வெளிநாட்டினரே தங்களுக்கு உதவியதாகவும் அரசாங்கத் துறையினர் யாரும் உதவிக்கு வரவில்லை என்றும் மலேசியாவின் கோல லங்காட் பகுதியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கூறியுள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த இடத்திற்குச் சென்றிருந்த தொழில் முனைவோர் மேம்பாட்டு, ஒத்துழைப்பு அமைச்சர் நோர் ஒமாரிடம் அந்த பெண்மணி கூறும் காணொளி இணையத்தில் வலம் வருகின்றன.
"நாங்கள் நெருக்கடியில் இருந்தபோது அரசுத் துறையினர் யாரும் உதவிக்கு வரவில்லை. வெள்ள நீர் வடிந்த பிறகுதான் அவர்கள் வந்தனர். அதற்கு பிறகு ஏன் வரவேண்டும்," என்று நோர் ஒமாரிடம் கேள்வி கேட்டார்.
வெள்ளம் அதிகமாக இருந்தபோது குடிமை தற்காப்புப் படையினர் மட்டுமே அங்கு காணப்பட்டதாக அவர் சொன்னார்.
தான் உட்பட ஒரு வீட்டின் கூரையில் குழந்தைகளுடன் சிக்கித் தவித்தவர்களைப் படகில் வந்த மூன்று இந்தோனீசிய ஆடவர்கள் மீட்டதாக அவர் சொன்னார்.
அப்பகுதியில் வீட்டிற்குள் சிக்கித் தவித்த பலரைக் காப்பாற்றுவதற்காக அவர்கள் அதிகாலை வரை பாடுபட்டதாக அவர் சொன்னார்.
இதற்கிடையே, வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போதுமான ஒருங்கிணைப்பு இல்லை என்றார் மனிதாபிமான ஆர்வலரும் மெர்சி மலேசியா அமைப்பின் நிறுவனருமான டாக்டர் ஜெமிலா மஹ்மூத்.
பாதுகாப்பு மையங்களைப் பார்வையிட்ட அவர், குழுவாகவும் தனித்தும் செயல்படும் தன்னார்வலர்கள் அற்புதமான பணிகளை மேற்கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.
வெள்ளம் வடிந்த பிறகு பலருக்குத் தங்களது கைபேசி கிடைத்தாலும் அதைச் சரி செய்வதற்கான பணம் இல்லாமல் பலர் தடுமாறுகின்றனர்.
இதையறிந்த பழுது நீக்கும் கடைக்காரர்கள் பலர், கைபேசி, கணினிகளை இலவசமாக சரி செய்துதர முன்வந்துள்ளனர்.
இதற்கிடையே, பாகாங், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், ஜோகூர், சபா, சரவாக் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று நேற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

