செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
461951f4-d8db-4f9d-9779-ba30e0c70258
-

இத்தாலியில் தடுப்பூசி போடுவது போல் நடித்த தாதி உட்பட மூவர் கைது

ரோம்: இத்தாலியில் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்ட துறைகளில் பணிபுரியம் பலருக்குத் தடுப்பூசி செலுத்துவது போல் நடித்து போலி சான்றிதழ்கள் வழங்கிய ஒரு தாதி உள்பட மூவரை போலிசார் கைது செய்தனர். சிசிலியில் உள்ள ஒரு தடுப்பூசி மையத்தில் போலி தடுப்பூசி சான்றிதழ்கள் வழங்கப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்தி போலிசார் கண்காணிக்க தொடங்கினர். இதில் தாதி ஒருவர் ஊசியில் உள்ள மருந்தை வெளியில் தெளித்துவிட்டு பிறகு ஊசி போடுவது போல் நடிப்பது பதிவானது. இதையடுத்து தாதி, தடுப்பூசி மையத் தலைவர் உள்பட 3 பேர் கையும் களவுமாகச் சிக்கினர்.

தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்கும் தென்னாப்பிரிக்க மக்கள்

கேப்டவுன்: ஓமிக்ரான் தொற்று அதிகரித்து வரும் தென்னாப்பிரிக்காவில் 44 விழுக்காட்டினர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களில் கால்வாசி பேர், தடுப்பூசி தங்களுக்கு ஊறு விளைவிக்கும் அல்லது தங்கள் உயிரைப் பறித்துவிடும் என்று நம்புவதே காரணம் என்று கேப் டவுன் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 1,940 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 34 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் ஆனால் தடுப்பூசி நிலையங்களுக்குச் செல்வதில் உள்ள சிரமம் போன்ற காரணங்களால் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றும் சொன்னார்கள்.

மியன்மார் சுரங்கத்தில் மண் சரிவு; பலரைக் காணவில்லை

மியன்மார்: மியன்மாரின் மரகத சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது அதனுள் பணியில் இருந்த கிட்டத்தட்ட 70 பேர் சிக்கியிருக்கக்கூடும் என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்த விபத்தில் ஒருவர் பலியாகிவிட்டதாகவும் உள்ளே சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் உள்ளுர் அதிகாரிகள் கூறுகின்றனர். காயங்களுடன் 25 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். 20 பேர் மாண்டுவிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மியன்மாரின் ஹப்கண்ட் என்னும் பகுதியில் உள்ள ஒரு சுரங்கத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. மியன்மாரில் சென்ற ஆண்டு ஜூலை மாதம் ஏற்பட்ட நிலச்சரிவில் 174 பேர் உயிரிழந்தனர். மேலும் 54 பேர் படுகாயமடைந்தனர்.