தமிழ்நாட்டிலும் வேரூன்றிய ஓமிக்ரான்; புதிதாக 33 பேருக்கு தொற்று

தமிழ்நாட்டிலும் வேரூன்றிய ஓமிக்ரான்; புதிதாக 33 பேருக்கு தொற்று

1 mins read
34057983-ffb0-429a-8c0c-417986a716f6
சென்னையில் கொவிட்-19 குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் சுவரோவியத்தைக் கடந்துசெல்லும் ஆடவர் ஒருவர். படம்: ஏஎஃப்பி -

இந்தியாவில் பரவிவரும் ஓமிக்ரான் கிருமி, இப்போது தமிழ்நாட்டிலும் வேரூன்றியுள்ளது. அம்மாநிலத்தில் புதிதாக 33 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக வியாழக்கிழமை (டிசம்பர் 23) தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஏற்கெனவே ஒருவரிடம் மட்டும் ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டு இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 34ஆக உயர்ந்துள்ளது.

முன்னதாக வெளியிடப்பட்டிருந்த தரவில், இந்தியாவில் இதுவரை 238 பேரிடம் ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், இப்போது தமிழ்நாட்டில் பதிவாகியுள்ள 33 புதிய பாதிப்புகளையும் சேர்த்து, இந்தியாவில் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 271ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் ஓமிக்ரான் பாதிப்பு அதிகரித்துவரும் வேளையில், கொவிட்-19 நிலவரம் குறித்து கலந்தாலோசிக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று வியாழக்கிழமை சந்திப்பு ஒன்றை நடத்துகிறார்.